சென்னை:தமிழ்நாடு அரசு மற்றும் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், போட்டி இயக்குநர் பரத் சிங் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு நடத்துவது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய காணொலி காட்சி நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.
முதலமைச்சர் வரவேற்பு
அதில் முதலமைச்சர், "44ஆவது செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டில் நடப்பது நமக்கு பெருமை. உலகின் தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு உருவாக்கி வருகிறது. தமிழ்நாடு அரசு உலக செஸ் போட்டியை சிறப்பாக நடத்துவோம். மேலும் அனைத்து வீரர்களையும் கைகூப்பிட்டு வரவேற்கிறேன்" என்று கூறினார்.
சதுரங்க விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழ்நாடு
இந்நிகழ்வின்போது மேடையில் பேசிய தலைமைச்செயலாளர் இறையன்பு, "தமிழ்நாடு அரசு இந்திய செஸ் கூட்டமைப்புடன் சேர்ந்து 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமான மாமல்லபுரத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. மாமல்லபுரம் இந்திய கட்டடக் கலைக்கான அருங்காட்சியகம். அங்கு இந்தப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளோம். 2,000 வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த 43 போட்டிகளை விட இந்த 44ஆவது போட்டி மிக சிறப்பானதாக இருக்கும் என்ற உறுதியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை தாராளமாக குறுகிய காலத்தில் செய்து முடிக்கலாம்.
தலைமைச் செயலாளர் இறையன்பு உரை செஸ் இந்திய மண்ணை சார்ந்தது. இதற்காக பெரிய வரலாறு உள்ளது. அந்த காலத்தில் போருக்குச் செல்வதற்கு முன்னர் மன்னர்கள் சதுரங்கம் விளையாடி விட்டுத்தான் செல்வார்கள். யார் இறந்தாலும் பெட்டிக்குள் செல்வார்கள் என்ற கருத்தும், ஒரு சிப்பாய் திறமை இருந்தாலும் அவர் பெரிய நிலைக்குச் செல்வார் என பல்வேறு கருத்துகள் சதுரங்கம் மூலம் தெரியவருகிறது.
தமிழ்நாடு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அளவில் சதுரங்கம் விளையாடுபவர்களை ஊக்குவித்து வருகிறது. எப்போதும் சதுரங்க விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழ்நாடு. தமிழ்நாடு இதுவரை 24 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி உள்ளது. வரும் காலத்தில் நிறைய கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும். செஸ் விளையாட்டை மேம்படுத்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
செஸ் விளையாட வேண்டும்
தொடர்ந்து பேசிய அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புத் தலைவர் சஞ்சய் கபூர், "இந்தியாவில் செஸ் விளையாட்டுக்கு பெயர்போன தமிழ்நாட்டின் சென்னையில் இந்த போட்டி நடக்கிறது பெருமை. மிகக்குறுகிய காலத்தில் இப்போட்டிக்கான அனுமதியை வழங்கி ஏற்பாடுகளை செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தப் போட்டியை சிறப்பாக நடத்துவோம். இந்தியாவின் எல்லா வீடுகளிலும் எல்லா குழந்தைகளும் செஸ் விளையாட வேண்டும் என்பது தான் என் கனவு. அந்தக் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சென்னை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமைசேர்த்த ஒரு இடம். அதனால் இங்கு நடத்துகிறோம்.
இந்தப் போட்டி ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடக்க வாய்ப்பு உள்ளது. தோராயமாக ரூ.100 கோடி செலவில் இப்போட்டி நடத்தப்படும். ரஷ்ய வீரர்களை அனுமதிப்பது தொடர்பாக FIDE என்ன சொல்கிறதோ அதைப் பின்பற்றுவோம். இந்த ஆண்டு இந்திய சதுரங்க விளையாட்டுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
கிழக்கு கடற்கரை சாலையில் போட்டி
கடைசியாகப் பேசிய போட்டி இயக்குநர் பரத் சிங் சவுகான், "இந்தப் போட்டி நடத்துவதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து ஐந்து நிமிடத்தில் அவர் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அன்றே கிழக்கு கடற்கரை சாலையில் போட்டி நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்து தற்போது கிட்டத்தட்ட 3,000-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா விதிமுறைகளில் அரசு என்ன சொல்கிறதோ அதைப் பின்பற்றுவோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து நிச்சயம் விலக்கு கிடைக்கும்' - மு.க.ஸ்டாலின் நம்பிக்கை