மக்கள் கல்வி கூட்டியகத்தின் ஒருங்கிணைப்பாளர் சு. உமா மகேஸ்வரி பேட்டி சென்னை:பள்ளி மாணவர்களின் விபரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு எப்போது விலக்கு கிடைக்கும் எனவும், பள்ளியில் சாதிய ரீதியாக தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் மக்கள் கல்வி கூட்டியகத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள்எமிஸ் இணையதளத்திற்கு தேவையான தகவல்களை பதிவுச் செய்வதால் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டு வருகிறது என கூறி போராட்டத்தை அறிவித்தனர். அப்போது அவர்களை அழைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் வருகைப் பதிவேட்டை மட்டும் பதிவு செய்தால் போதும், மற்றத் தகவல்களை வட்டாரக் கல்வி அலுவலகத்தின் மூலம் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
EMIS வேலையை ஆசிரியர் செய்ய வேண்டாமென்று கூறினர்:ஆனால் தற்பொழுது வரையில் ஆசிரியர்களை எமிஸ் பணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து மாணவர்களின் விபரங்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு பல்வேறுத் தரப்பிலும் எதிர்ப்புகள் இருந்தும் வருகிறது. இது குறித்து மக்கள் கல்வி கூட்டியகத்தின் ஒருங்கிணைப்பாளர் சு. உமா மகேஸ்வரி கூறியதாவது, “சமீபத்தில் ஆசிரியர் மனசு என்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி பேசும் போது, இனிமேல் ஆசிரியர்கள் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் EMIS வேலையை ஆசிரியர் செய்ய வேண்டாம் என்று கூறினார்.
ஜெராக்ஸ் வாங்குவது பெரிய போராட்டம்:இன்றைக்கு (15/11/2023) கடைசி நாள் ஆதார் எண்ணையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் ஒன்றாக சேர்த்து கல்வி உதவித் தொகைக்கு அப்டேட் செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். வருமானச் சான்றிதழ் வாங்கி வரச் சொல்லி மூன்று மாதமாக குழந்தைகளிடம் கூறிவிட்டோம். பெற்றோர்களிடமும் கூறியுள்ளோம். இன்னும் வாங்கி வரவில்லை. கல்வி உதவித் தொகைக்கு ஆசிரியர் தான் உதவ வேண்டும் என்று கூறுகின்றனர்.
என் வகுப்பில் 13 பெண் குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். தினமும் இவர்களிடம் இந்த விவரங்கள் கேட்டு, அவர்களிடமிருந்து ஜெராக்ஸ் வாங்குவது பெரிய போராட்டமாக உள்ளது. அவற்றையே இன்னும் பதிவேற்றம் செய்ய முடியாத நிலைமை உள்ளது. இந்த நிலையில் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு இன்று தான் கடைசி நாள் என்று சுற்றறிக்கை வந்துள்ளது.
கனமழை பெய்து வரும் நிலையில் இன்று தான் கடைசி நாள், இதை கட்டாயம் முடிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. இது பக்கம் இருக்க, சாதி, இனம் பற்றி பள்ளிக்கூடத்தில் பேசக்கூடாது, என்ன ஜாதி என்று எல்லாருக்கும் கேட்கும் வண்ணம் மாணவர்களிடம் கேட்கக் கூடாது என்று பேசும் குரல்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெளிப்படையாக கூறியாச்சு:ஆனால் எதார்த்தத்தில், எங்கள் வகுப்பறைக்கு சென்ற உடனே, “எஸ்.சி மாணவர்கள் எல்லாம் எழுந்திருங்க, வருமானச் சான்றிதழ் வாங்கியாச்சா? பேங்க் பாஸ் புக் ஜெராக்ஸ் எங்க? ஜாதி சான்றிதழ் ஜெராக்ஸ் கொண்டுவாங்க”. இப்படியான உரையாடல்கள் தான் கேட்கும். நாங்கள் தனியாக கூப்பிட்டு தான் கேட்போம் என்று ஆசிரியர் கூறினால் அது நல்லது தான்.
வாரத்தில் ஐந்து நாட்களும் 8 பிரிவுகளும் வகுப்பிற்குள்ளேயே அடைபடும் ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தனியாக சந்தித்துக் கேட்கவும் பேசவும் வாய்ப்புகள் அமைவதில்லை. ஆசிரியர்களுக்கு இந்த வேலைகளையெல்லம் கொடுக்க வேண்டாம் என பலமுறை கூறியுள்ளோம். சில மாதங்களுக்கு முன்பு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழு சென்னையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய போது கல்வித் துறை உயர் அலுவலர்கள் இயக்குனர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என அனைவரிடமும் வெளிப்படையாக கூறினோம்.
பாடம் நடத்த வேண்டும்: இதுவரை எந்த மாற்றமும் இல்லை. என் வகுப்பில் உள்ள 13 பெண் குழந்தைகள் மட்டும் முக்கியம் இல்லை. என்னிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ள 60 குழந்தைகளது கல்வியும் முக்கியம். எட்டாம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் 282 பக்கங்கள் உள்ளன. அதில் உள்ள கணக்குகளை எல்லா மாணவர்களுக்கும் புரியும் படி நடத்த முயற்சி செய்ய வேண்டும். வகுப்பு கணக்கு நோட்டு, வீட்டு கணக்கு நோட்டு, தேர்வு நோட்டு, வடிவியல் நோட்டு, கிராப் நோட்டு என எல்லாவற்றிலும் கணக்குப் போட வைத்து திருத்தித் தர வேண்டும்.
ஹார்மோன் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும்: வகுப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்ய அருகே நிற்க வேண்டும். இடையில் விடுப்பு எடுத்தால் ஏன்? எதற்கு? என்று விசாரித்து வராத அன்று நடத்திய கணக்குகளைப் போட வைக்க வேண்டும். தேர்வுகள் நடத்தி மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளவும், பின்னடைவுகள் எனில் கவலை கொள்ளவும் வேண்டும். பிறகு அவர்களுக்குள் நடக்கும் சண்டைகள், வயதின் காரணமாக தலை தூக்கும் ஹார்மோன் பிரச்சனைகள் இவற்றையும் கண்டு வழி நடத்த வேண்டும்.
எமிஸ் தளத்தில் சலிப்படைய துளியும் விருப்பமில்லை:அவர்களிடம் வெளிப்படையாக பேசி நெறிப்படுத்த வேண்டும். இவற்றை ஒரு ஆசிரியராக செய்ய எனக்கு விருப்பம் உள்ளது. அதற்காகவே பணி அமர்த்தப்பட்டு உள்ளேன். அதை விடுத்து இந்த சான்றிதழ்களைக் கேட்டு, எமிஸ் தளத்தில் பதிந்து, சலிப்படைய துளியும் விருப்பமில்லை.
இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ஆசிரியர்கள் பாடமே நடத்துவதில்லை என ஒரு பக்கம் குற்றம் சாட்டுவது, இதை வைத்து சில ஆசிரியர்கள் நிஜமாகவே பாடம் நடத்தாமல் குழந்தைகளுக்கு துரோகம் பண்றது, ஆசிரியர்கள் அமைப்புகள் இந்த சிக்கலை எல்லாம் பேசாமல் மௌன விரதம் இருப்பது, கோரிக்கை வைத்து கெஞ்சுவது, இப்படியான ஒவ்வொரு நுட்பமான வடிவங்களிலும் ஏழைக் குழந்தைகளின் கல்வி, காவு வாங்கப்படுகிறது என்பதை எப்போது உணரப் போகிறோம்?” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:”வன்கொடுமை சம்பவங்களில் தமிழக அரசின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது” - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி