கரோனா பாதிப்பு காரணமாக திருமணம், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வெளியூர் செல்பவர்களுக்கு மட்டும் மின்னணு முறையில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல் நலக்குறைவுகளுக்கு உடனடி அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், மருத்துவம் மற்றும் மரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதிகோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "நியாயமான காரணங்கள் உள்ள எல்லா விண்ணப்பங்களையும் உடனுக்குடன் பரிசீலித்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சந்தேகத் தன்மை உடைய விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர், அந்தஸ்து அலுவலர் மேற்பார்வையில் 30 நபர்கள் இந்தப் பிரிவில் பணியாற்றி வருகின்றனர். கால் சென்டர் செயல்படும் நேரம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை என்ற போதிலும், துக்க நிகழ்வுகள் மற்றும் மருத்துவ அவசரத் தேவைகள் என்றால் நேரத்தைப் பற்றி பொருட்படுத்தாமல் அதிகபட்சம் 1 மணி நேரத்திற்குள் பயணிப்பதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, அவசர தேவைக்கான கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (10.05.2020) மாலை 6 மணி நிலவரப்படி திருமணம், துக்க நிகழ்வு, மருத்துவ அவசரம் உள்ளிட்ட தேவைகளுக்காக அளிக்கப்பட்ட 3 லட்சத்து 61 ஆயிரத்து 433 விண்ணப்பங்களில், 3 லட்சத்து 48 ஆயிரத்து 210 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 222 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. சமூக வலைதளப்புகார் கூட, கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பின் விரிவான விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுக்களின் பணிகள் என்ன?