கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் விமானம், பேருந்து உள்ளிட்ட பயணம் செய்ய ஏதுவான அனைத்து சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அவசர தேவைகளுக்காக பயணிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில் அவசர பாஸ் கொண்டுவரப்பட்டது. இதற்காக, காவல் துறை சார்பாக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டது. இதன் மூலமாக, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், மருத்துவத் தேவை, திடீர் துக்க நிகழ்வு போன்ற அவசர தேவைகளுக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்ல விரும்பும் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை எண், மின்னஞ்சலுக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டது.
வெளியூர் செல்ல அவசர பாஸ்....மாநகராட்சி, வருவாய் துறையில் பெறலாம்! இதையடுத்து, சுமார் 9 ஆயிரம் பேர் வெளியூர் செல்ல விண்ணப்பித்திருந்தனர். இதில் 140 பேருக்கு மட்டுமே அனுமதி பாஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று வருவாய் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், “ இனி அவசரத் தேவைக்காக செல்லும் பொதுமக்கள் சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். அனுமதி பாஸ் வழங்கியுள்ள நபர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்திற்கு பயணிக்க வேண்டுமெனில் செல்லக்கூடிய மாவட்டத்தின் ஆட்சியர் ஒப்புதல் பெற வேண்டும். அவசர தேவைக்காக தொடங்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலர்களின் கீழ் இயங்கும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக, முக்கிய புள்ளிகளுக்கு காவல் துறை முறைகேடாக வாகன சீட்டு அனுமதி வழங்கியது தொடர்பாக வடபழனி உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம், கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் அருள் மொழி, எஸ்பிளனேடு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 7 பேருக்கு கரோனா உறுதி