சென்னை:தமிழ்நாட்டைச்சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையிலுள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பதாரர்களிடமிருந்து இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்விற்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, 7077 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2023ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் முதல்நிலைத்தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் வரும் நவ.13ஆம் தேதியன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ளது.