தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Elfin Finance: ஜாமீனில் இருந்த எல்ஃபின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீண்டும் கைது! - Elfin Finance Company Director arrested

ஜாமீனில் வெளியே இருந்த எல்ஃபின் நிதி நிறுவன இயக்குநர், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Elfin Finance Company Managing Director on bail was arrested again
ஜாமீனில் இருந்த எல்ஃபின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீண்டும் கைது

By

Published : Jul 11, 2023, 10:56 AM IST

சென்னை: திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் எல்பின் எனும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. சகோதரர்களான ராஜா (எ) அழகர்சாமி மற்றும் ரமேஷ் ஆகிய இரண்டு பேர் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

எல்ஃபின் நிறுவனத்தின் கீழ் அறம் மக்கள் இயக்கம், அறம் டிவி உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பணம் இரட்டிப்பு, பல்வேறு வகையான பொருட்கள் வழங்கல், வெளிநாடு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து செயல்பட்டு வந்தது.

அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி அந்த நிறுவனத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர். அவ்வாறு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அறிவித்தப்படி பணத்தை முறையாக வழங்காமல் பண மோசடி செய்ததாக பல முறை அந்த நிறுவனத்தின் மீது புகார்கள் அளிக்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததால் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்தனர். அதேபோல முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என ஜிஎஸ்டி அதிகாரிகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை செய்தனர். தற்போது அந்த நிறுவனம் செயல்படவில்லை.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவின் படி எல்ஃபின் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே இருந்தனர். இந்நிலையில் எல்ஃபின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராஜா (எ) அழகர்சாமி நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதால் அவரை சிறப்பு புலனாய்வு துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.

அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் அவர் முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தில் வாங்கிய அசையா சொத்துக்கள் பற்றியும், சொத்துக்கள் வாங்க யாரிடம் முன்பணம் கொடுத்துள்ளார் என்பது குறித்தும் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார். அதனடிப்படையில் அந்த சொத்துக்களை அரசுடமை ஆக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறப்பு புலனாய்வு துறையினர் செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளனர். மேலும் இவர் பாஜகவில் பொறுப்பு வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே எல்ஃபின் நிறுவனம் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தோடு தொடர்புடைய 257 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன, 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கனல் கண்ணன் கைது; பேருந்து நிறுத்தப்பட்டதால் நாகர்கோவிலில் பதற்றம்!

ABOUT THE AUTHOR

...view details