சென்னையைதலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம், 'சுரானா பவர் லிமிடெட்' மற்றும் 'சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட்' ஆகியவை, ஐ.டி.பி.ஐ, எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்து 3,986 கோடி ரூபாய் பணத்தை கடனாகப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் கடனாக 1,301.76 கோடி ரூபாயை ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா பவர் லிமிடெட் 1,495.76 கோடி ரூபாயை ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் 1,188.56 கோடி ரூபாய் எஸ்.பி.ஐ வங்கியில் இருந்தும் கடன் பெற்று, இந்த கடன் தொகையைத் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, அந்த நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த கடன் தொகையை வைத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.