சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் வெவ்வேறு சம்பவங்களில் 82 யானைகள் இறந்துள்ளது என தமிழ்நாடு வனத்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு காடு வளமாக இருப்பதற்கு யானைகளின் பங்கு மிக முக்கியமாக அமைகிறது. யானைகள் அழிந்தால் காடுகள் அழியும்.
காடுகள் அழிந்தால் விலங்குகள், மனிதர்கள் வாழவே முடியாது. உலகம் முழுவதும் குறைந்து வரும் யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யானைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து யானைகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டங்களையும், முகாம்களையும் அமைத்து வருகின்றன.
யானைகள் பொதுவாக கூட்டுக் குடும்பமாக வாழக்கூடியவை. ஒரு யானைக்கூட்டத்தில் பொதுவாக 8 முதல் 15 யானைகள் இருக்கும். அந்தக் கூட்டத்தை வழிநடத்துவது, வயது முதிர்ந்த 40 அல்லது 50 வயதுடைய பெண் யானை ஆகும்.
ஒரு யானை இறக்கும் செய்தியை, கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் நாம் சுமார் 80 முறைக்கும் மேல் கேட்டு இருப்போம். அதாவது, ஒரு மாதத்திற்கு 5-லிருந்து 6 யானைகள் சராசரியாக இறந்துள்ளன. இதில் இயற்கை மரணம், மனிதத் தவறுகள், ரயில் விபத்துகள், மின்சார வேலி போன்றவையும் அடங்கும். 10 யானைகள் இயற்கை மரணம் இல்லாமல் இறந்துள்ளன.
இது குறித்து வனவிலங்கு குற்றவியல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் பல்வேறு இடங்களில் வனவிலங்குகள் அதிக அளவில் இறந்துதான் வருகின்றன. மத்திய, மாநில அரசுகளால் யானைகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், வனத்துறையில் இருக்கும் அதிகாரிகள், வனத்துறை கல்வி படித்த நபர்களாக அதிக அளவில் இல்லை. இதனால் வனத்தைப் பற்றியும், வனவிலங்கு குறித்தும் அவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இது குறித்து யானை ஆர்வலர் எஸ்.சந்திரசேகர் கூறுகையில், "இது வரையிலும் எத்தனை யானைகளுக்கு ரேடியோ காலர் அணிவித்து, அதில் எத்தனை யானை உயிருடன் உள்ளது? யானைகளைக் கண்காணிப்பதற்கான குழு இதுவரை அமைக்கப்படவில்லை. தொடர்ந்து யானைகளை வனத்துறை கண்காணிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஓசை.காளிதாசன் கூறுகையில், "வனவிலங்கு இறப்பை நாம் எப்படிப் பார்க்க வேண்டுமென்றால், அதன் பிறப்பு எண்ணிக்கையை வைத்துதான் நாம் பார்க்க வேண்டும். பிறக்கும் எல்லா உயிர்களும் இறக்கத்தான் செய்யும். அது இயற்கை மரணமாக இருப்பதில் தவறில்லை.