கோவை:காடு செழிப்பாக இருந்தால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும் என்பார்கள். அந்த காட்டையே செழிப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு யானைகளுக்கு உண்டு. நாளொன்றுக்கு 200 கிலோ பசுந்தீவனங்களை உண்ணும் யானைகள், இடும் சாணத்தின் மூலம் பல்லுயிர் பெருக்கம் நிகழ்வதாகவும், வனப்பகுதி அடர்த்தியாவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த யானைகளை பாதுகாப்பது இயற்கையை பாதுகாப்பதற்கு சமம். யானைகள் அவ்வப்போது, காடுகளில் இருந்து இறங்கி விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதால், யானைகள் என்றாலே பாதிப்பு ஏற்படுத்தும் விலங்கு என பலரும் கருதுகின்றனர்.
பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் யானைகள் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் வனத்துறையினர் பொதுமக்களிடம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். துறை ரீதியாக வனத்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், சில வன அலுவலர்கள் யானைகள், காடுகளை காக்க தனிப்பட்ட முறையில் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.
அந்த வகையில், கோவை வனச்சரகம் மாங்கரை வனத்துறை வாகன சோதனைச் சாவடியில் உள்ள வனக்காப்பாளர் சோழமன்னன் யானைகள் மீது கொண்ட காதலால் யானைகளின் சிறப்புகள் குறித்தும அதனால், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் சினிமா மெட்டுடன் பாடல்களை இயற்றியும், பாடியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.