சென்னை:தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் முடிவை மாநில அரசு அறிவித்திருந்தது. இதுதொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தப்பின் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பின்படி, அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். 2 மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு(15.30 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு 72.50 ரூபாயும், 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு(7.94 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாயும், 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு 297.50 ரூபாயும், 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு(1.32 சதவீதம்) 155 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதோடு குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். 2 மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு 275 ரூபாயும், மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு 395 ரூபாயும், 900 யூனிட்டுகள் வரை நுகர்வு செய்யும் 84 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு 565 ரூபாயும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்ப்பட்டது.
இந்த நிலையில் இன்று (செப் 10) முதல் தமிழ்நாட்டில் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மின் கட்டண உயர்விற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளதை தொடந்து இந்த அமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்த உயர்வு 2026-27ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு மேடையில் 80 விழுக்காடு... மற்றொரு மேடையில் 70 விழுக்காடு... முதலமைச்சர் மீது சீமான் விமர்சனம்...