தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

24 மணி நேரம்தான்... அதற்குள் நிரூபிக்க வேண்டும் - அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி வைத்த செக்

பிஜிஆர் நிறுவனத்தில் கோபாலபுரம் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியதை அடுத்து, 24 மணி நேரத்திற்குள் அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

By

Published : Mar 16, 2022, 10:52 PM IST

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 16) மாலை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து அண்ணாமலை பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார். புரிதல் இல்லாமல் பொதுவெளியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அரைகுறையாக அத்திட்டம் குறித்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் செப்டம்பர் 5, 2006ஆம் ஆண்டு தொடங்கியது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் இத்திட்டம் முடிவு பெறாமல் அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்டிருந்தது. வைப்புத்தொகை 10 விழுக்காடு, ஆனால் அதை குறைத்து தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சலுகை காட்டியது போல அண்ணாமலை பேசியுள்ளார்.

அறிந்து பேசுங்க அண்ணாமலை

ஒன்றிய அரசு வைப்பு நிதியை 3 விழுக்காடு ஆக குறிப்பிட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் பிஜிஆர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அனைத்தையும் சரிபார்த்து தானே கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் போட்டார்கள். அவர்கள் சரியான நிறுவனமா, இல்லையா என்று பார்க்க வேண்டியது யார் பொறுப்பு?. 2019இல் அதிமுக ஆட்சியில் என்ன மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டதோ, அதே மதிப்பீட்டிற்கு தான் பிஜிஆர் நிறுவனத்திற்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.

முழு விவரத்தை தெரிந்து கொண்டும், புரிந்து கொண்டும் கருத்துகளை சொல்ல வேண்டும். அவர்களுக்கு புரியவில்லை என்றால் புரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியிடமும், அமைச்சர் தங்கமணியிடமும் கேட்க வேண்டிய கேள்விகளை அண்ணாமலை இப்போது கேட்டுள்ளார்.

உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்

பிஜிஆர் நிறுவனத்தில் கோபாலபுரம் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார். 24 மணி நேரத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இல்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் பேசிய அவர், "நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டபோது தமிழ்நாட்டில் ஒரு நொடி கூட மின்வெட்டு ஏற்படாமல் சீரான மின் விநியோகம் கொடுக்கப்பட்டது. மானிய கோரிக்கையில் கூறியபடி இன்று காலை கூட மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

அண்ணாமலைக்கு பக்குவம் வேண்டும். பக்குவம் இல்லை என்றால், பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறு நடந்தால் முதலமைச்சர் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார். உங்கள் உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்படும் ஆட்சியல்ல திமுக. இத்தோடு அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். அண்ணாமலை தான் கூறியதை நிரூபிக்க வேண்டும் இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கர்நாடகத்தின் ஹிஜாப் தடைக்கு எதிராக சென்னையில் 2ஆவது நாளாக மாணவர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details