சென்னை:தமிழ்நாட்டில் மின் உற்பத்தி, மின் விநியோகம், விரிவாக்க பணிகள், பொது கட்டுமான வட்டம் ஆகிய இடங்களில் சுமார் 12 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 10, 2007 அன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரப்படுத்தப்பட்டனர்.
ஆனால், 25 ஆண்டுகள் கடந்த பின்னர், தொடர்ந்து பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய மின்வாரிய நிர்வாகம் மறுத்து வருகிறது. கஜா, தானே, ஒக்கி போன்ற புயல் மற்றும் சென்னை பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மின் விநியோகத்தை சீரமைத்து குறுகிய காலத்தில் பணிகளை செய்து தடையில்லா மின்சாரம் வழங்கி, ஆளும் அரசுகளுக்கு பெருமை சேர்த்தவர்கள்.
மழை, வெயில் என பாராமல் உற்பத்தி நிலையங்களில் எரியும் நிலக்கரியின் வெப்பத்திற்கு நடுவே பணியாற்றி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற பணியிலும், மனிதர்கள் நடமாட முடியாத மலை பிரதேசமான காடம் பாறை, குந்தா, கோதையாறு, பாபநாசம் உள்ளிட்ட நீர்மின் உற்பத்தி வட்டங்களிலும் மின் தொடரமைப்பு மற்றும் பொதுக்கட்டுமான பகுதிகளிலும் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 950 நாள் 8.8.1990-ன்படி மின் உற்பத்தி, பராமரிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்த முறையை புகுத்தக்கூடாது என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நிரந்தர தன்மை வாய்ந்த இந்தப்பணி இடங்களில் ஒப்பந்த ஊழியர்களை பணியாற்ற வைக்கக்கூடாது என்று சட்டம் இயற்றிய ஆட்சியாளர்களே அந்த சட்டத்தை மீறுகிறார்கள்.