சென்னை: மாதவரத்தில் வடக்கு மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளை வேகப்படுத்துவதற்காக இந்தக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளில் 60 விழுக்காடு பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளன.
புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கட்டணம் வசூலிக்கப்படும். 60 நாள்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின் கணக்கீட்டில் புதிய கட்டணம் அமலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கட்டணமும், அதற்கு முன்பான நாட்களுக்கு பழைய கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
மின் உற்பத்திக்கும், மின் விநியோகத்திற்கும் இடையே அதிக வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாடுகளைக் குறைக்கும் வகையில் புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக சிறு, குறு நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன் பேரில் உத்தேசிக்கப்பட்ட தொகையை விட குறைவான அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின் கட்டணம் தமிழ்நாடு மட்டுமில்லாமல், கர்நாடக உள்ளிட்ட 14 மாநிலங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக மிக குறைவாக மின் விலை நிர்ணயக்கபட்டு, வசூலிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட 316 புதிய துணை மின் நிலையங்களுக்கு, 242 மின் நிலையங்கள் அமைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டடு அதற்கானப்பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத்தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 62 விழுக்காடாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் 24 விழுக்காடு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. நேற்று முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நான் அதை நீதிமன்றம் வாயிலாக சந்தித்தேன். அதுபோல குற்றச்சாட்டு வரும் பொழுது நீதிமன்றம் சென்று தான் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்க வேண்டும். 2011, 2016, 2021ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவினர் சமர்ப்பித்த சொத்து மதிப்பு அளவின், தற்போதைய சொத்து மதிப்பு அளவின் வித்தியாசமும், அவர்களின் குடும்பத்தினர் சொத்து மதிப்பு அளவின் வித்தியாசத்தையும் பார்த்தாலே உண்மை தெரிந்துவிடும்" என்றார்.
இதையும் படிங்க:தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானியக்குழுவின் சம்பளம் வழங்கப்படுவதில்லை - துணைவேந்தர் கெளரி