சென்னை:மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என நவம்பர் 15ஆம் தேதி மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் எனக் கூறப்பட்டது. உடனடியாக இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதால் மக்களிடையே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.
மின்சார வாரியத்தின் இந்த உடனடி நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றது. அதற்கு, "மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான திட்டம் ஒழுங்கு முறை ஆணையத்தால் கொண்டுவரப்பட்டது" என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்தது.
ஆதார் அட்டையானது ஒரு மனிதனின் அடையாளத்தை காண்பதற்காக உருவாக்கப்பட்டது. இதை ஏற்கனவே, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, பான் எண், உழவர் அட்டை, வாக்காளர் அட்டையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் இணைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் மோசடிகள் தவிர்க்கப்படும் எனவும், மின்சார வாரியம் நவீனப்படுத்தப்படும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்திருந்தது. இந்தத் திட்டம் குறித்து மக்களுக்கு பல கேள்விகள் எழுந்துள்ளன.
இது குறித்து விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "இந்தத் திட்டத்தால் மக்கள் குழப்பம் அடைய வேண்டாம். இந்த திட்டத்தால் குடிசை, 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறி, நெசவாளர்கள், விவசாயிகள் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏற்கனவே மின்சார வாரியத்தால் வழங்கப்படும் மானியம் தொடர்ந்து செயல்படும். ஒருவர் பல இணைப்பு வைத்திருந்தாலும் அவருக்கு 100 யூனிட் இலவச வழங்கப்படும். அவர் அனைத்து இணைப்பிற்கும் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம்.
டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஆதாரை இணைக்காமல் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். டிசம்பர் 31ஆம் தேதி வரை ஆதார் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மின்சார கட்டண நுகர்வோர் மறைந்திருந்தால், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி உரிய ஆவணங்களை கொடுத்து பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொது மின் இணைப்பானது வர்த்தக பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தில் 15 சதவீத மின் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக அதற்கும் ஆதார் எண் இணைப்பது அவசியம்" எனக் கூறினார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார வாரியமும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும், மக்களிடையே ஒரு வகையான அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக, பல இணைப்பிற்கும் ஒரே ஆதார் அட்டையை இணைத்து கொள்ளலாம் என அரசு கூறினாலும், இணைத்த பின்னர் ஒரு இணைப்பிற்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு அறிவிக்கும் என்ற அச்சம் உள்ளது. அதே போன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் யூனிட் கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளது. இதற்கும் பிற்காலத்தில் குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கப்படலாம் எனவும் அச்சம் நிலவுகிறது.
மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொது மின் இணைப்பில் 1D என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கு மாடியில் இரண்டு வீடு வைத்திருந்தாலும், 100க்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருந்தாலும் வர்தக பயன்பாடான ரூ.8 யூனிட்டுக்கு வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அடுக்குமாடி குடியிருப்பில் குறைந்த அளவிலான வீடு வைத்திருப்போர் அதிக கட்டணம் செலுத்த வேண்டுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான தேவை என்ன என்பது குறித்து கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான செயலியின் இணைய தளத்தில் முடக்கம் ஏற்படுகிறது.
இது குறித்து நம்மிடையே பேசிய சிட்லப்பாக்கம் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவரும் மற்றும் சமூக ஆர்வலருமான விஸ்வநாதன், "மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தில் மக்களுக்கு பல குழப்பங்கள் உள்ளன. அதில் குறிப்பாக வாடகை வீட்டில் வசிப்போர் மற்றும் அதிகமான மின் இணைப்பு வைத்திருப்போர் குழப்பத்தில் உள்ளனர். உடனடியாக அமல்படுத்தி, திட்டத்தை செயல்படுத்த தொடங்கியதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த திட்டத்தை அரசு, மக்களிடையே தெளிவாக விளக்க வேண்டும். ஆதாரை இணைப்பதற்காக 6 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என கூறினார்.
சிட்லப்பாக்கம் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவரும் மற்றும் சமூக ஆர்வலருமான விஸ்வநாதன் பாரத் மஸ்தூர் சங்க மாநில பொதுச்செயலாளர் நடராஜன் பேசுகையில், "மின் நுகர்வோர்கள் எவ்வளவு மானியம் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றிய கணக்கை கண்டறிய மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. இதனால் மானியம் ரத்து செய்யப்படும் என இதுவரை கூறவில்லை" என்றார்.
தமிழகத்தில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்பு உள்ளது. இதற்கான விவரம் முழுமையாக இல்லாததால் ஆதார் எண்ணை இணைக்கும் போது இது போன்ற சிக்கல்கள் சீர்செய்யப்படும் என கூறப்படுகிறது. மின்சார வாரியத்திற்கு தற்போது 1.57 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் இந்த திட்டதின் மூலம் கடனை குறைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வீட்டு இணைப்பின் மூலம் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் போன்ற மோசடிகள் தவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விரைவில் கொடுங்கையூர் குப்பை கிடங்கிலும் பயோ மைனிங் முறை!