சென்னை: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஏப்ரல் 5ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் நேற்றைய (மார்ச் 11) தினம் வெளியிடப்பட்டது. இன்னும் தேர்வுக்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அதற்கான தேர்வு மையங்கள் அமைக்கும் பணி பள்ளிக்கல்வி துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதும் நேரங்களில் மின் தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு மின்சாரம் வழங்கும் அனைத்து மின்மாற்றிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மும்முனை(3 phase) மின்சாரம் வழங்கப்பட வேண்டும். தேர்வு மையங்களுக்கு மின் விநியோகம் செய்யும் மின்மாற்றிகளின் HT மற்றும் LT-யை சரிபார்ப்பதற்கு கடமைப் பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு 4 அல்லது 5 தேர்வு மையங்களிலும் ஏதேனும் ஒரு அவசர வேலையில் கலந்து கொள்ள ஒரு களப் பணியாளர் நியமிக்கப்பட வேண்டும். தேர்வு நேரம் மற்றும் மாலை உச்ச நேரங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக TANGEDCO இன் UG கேபிள்கள் சேதமடைவதைத் தவிர்க்க, தோண்டும் பணியை மேற்கொள்வதற்கு முன்னதாகவே முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். மின்மாற்றிகளில் தேவையான பராமரிப்பு பணிகள் தேர்வுகள் தொடங்கும் தேதிக்கு முன்பாக மேற்கொள்ளப்படும்.