கரோனா தொற்றுப் பரவலை தடுக்க தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மாநகராட்சி, சுகாதாரதுறை, மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் பணிகளுக்கு செல்லும் போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினால், அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது என டிஜிபி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக ஊழியர்கள் பணிக்கு செல்லும் போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டும், அடையாள அட்டையை காண்பித்தால் கூட செல்லவிடாமல் வாகனங்களை பறிமுதல் செய்ய போவதாக மிரட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால், வேலைக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருவதாக டிஜிபிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் அத்தியாவசிய தேவைகளின் கீழ் வரக்கூடிய துறை குறித்து அரசாணையிலும் வெளியிடபட்டுள்ளது.
கரோனா தொற்று பரவி வரும் சூழலில், மருத்துவமனையில் மின்சாரம் சம்மந்தமான பிரச்னைகள், பொதுமக்களுக்கு அவசர கால சேவைகளை நிவர்த்தி செய்வதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக அலுவலர்கள், ஊழியர்களின் சேவைகள் தேவைப்படுகிறது.
எனவே, அந்தத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்தவுடன் அவர்களை உடனே பணிக்கு அனுப்ப வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார். இதை அனைத்து உயர் அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: '1913க்கு ஒரு ரீங் விட்டா போதும்' - கரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகாரட்சியின் அறிவிப்பு