சென்னை:சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமாக 24 குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புகளில் உள்ள மின் இணைப்புகளை, தனது மனைவி சரஸ்வதி பெயரில் பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், புதிய இணைப்புகளைப் பெறவும் மின்சார வாரியத்தை அணுகியுள்ளார்.
மின்சார வாரிய பொறியாளர் கேட்ட லஞ்சம்
அந்த அடிப்படையில் கடந்த 2018ஆம் ஆண்டு சோழிங்கநல்லூர் மின்சார வாரிய உதவிப்பொறியாளர் செந்தில் நாதன் என்பவரை அணுகியுள்ளார். பெயர் மாற்றம் செய்வதற்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.200 மற்றும் புதிய மின் இணைப்புக்கு ரூ.1600 செலுத்த வேண்டும் எனவும் அரசு நிர்ணயம் செய்துள்ளது.
ஆனால், ஒவ்வொரு மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கும் ரூ.2500 லஞ்சமாகவும், புதிய இணைப்புகளுக்கு ரூ.6,500 லஞ்சமாக கொடுக்க வேண்டுமெனவும் உதவிப்பொறியாளர் நிர்பந்தித்துள்ளார்.
இவ்வளவு லஞ்சப் பணத்தைக் கொடுத்து மொத்தமாகப் பெயர் மாற்றம், புதிய இணைப்புகளைப் பெறமுடியாது என்ற அடிப்படையில் , 5 மின் இணைப்புகள் மட்டும் பெயர் மாற்றம் செய்யவும் 5 புதிய இணைப்புகளைப் பெறவும் ரமேஷ் முடிவு செய்தார். இதற்காக அரசு நிர்ணயித்த பணத்தையும் சோழிங்கநல்லூர் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் செலுத்தினார். மேலும், லஞ்சமாக ரூ.5000 பணத்தை உதவிப் பொறியாளர் செந்தில் நாதனுக்கு கொடுத்துள்ளார்.