சென்னை:சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான 41 புறநகர் மின்சார ரயில் சேவை இன்று (அக். 02) காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
சென்னை பெருநகருடன், புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை காணப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை கொடுப்பதால், அலுவலகம் செல்வோர் முதல் பள்ளி, கல்லூரி என பல நடுத்தர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில்கள் காணப்படுகின்றன.
மின்சார ரயில் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, மூர்மார்கெட் - அரக்கோணம், மூர்மார்கெட் - கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டை ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:வாஷிங்டனில் களைகட்டிய உலக கலாச்சார விழா.. 180 நாடுகளை சேர்ந்த 10 லட்சம் மக்கள் பங்கேற்பு!
மேலும், கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவையில், 4-வது வழித்தட பணி காரணமாக சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வரையில் மட்டுமே தற்போது ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் மின்சார ரயில் சேவை, பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரையிலான ரயில்கள், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து முன்னறிவிப்பு ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விடும்.
தற்போது, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மெரினா கற்கரைக்குச் செல்பவர்களின் கூட்டம் ரயில் நிலையங்களில் அலைமோதுகிறது. தற்போது, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இதையும் படிங்க:கடல் கடந்த காதல்; தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம்.. கொடைக்கானலில் மும்மதப்படி நடந்த சூப்பர் கல்யாணம்!