சென்னை: திமுகவுக்கும் மின்சாரத்திற்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. அக்கட்சி ஆட்சிக்கு வந்தாலே பல மணி நேரம் மின் தடை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பரனில் மூட்டை கட்டி வைத்திருந்த விசிறிகளை மீண்டும் தூசி தட்டி வைத்துள்ளனர்.
இவங்க வந்தாலே இப்படித்தாம்பா
இது தற்செயலா அல்லது கவனக் குறைவா என்பதை பற்றியெல்லாமல் விவாதிக்க நேரமில்லை. 'இவங்க வந்தாலே இப்படித்தாம்பா நடக்கும்' என தேநீர் கடைகளில் புலம்பும் குரல்களை கேட்க முடிகிறது. மாணவர்களின் ஆன்லைன் கல்வி, வொர்க் ஃபிரம் ஹோம் உள்ளிட்ட பல வேலைகள் பாதிக்கிறது. குடும்பமாக உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்க முடியவில்லை என வருத்தப்பட்டுக்கொள்கிறார்கள்.
அணிலால் மின்தடை
கடந்த திமுக ஆட்சி முடிவுக்கு வர பல மணி நேர மின் வெட்டு காரணமாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் மின் தடை ஏற்படுவதால் திமுக தலைமைக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க மின்துறை அமைச்சர் கொடுத்த விளக்கம் அக்கட்சிக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
"சில இடங்களில் செடிகள் வளர்ந்து மின் கம்பிகளுடன் மோதுவதால் அங்கு அணில்கள் வருகின்றன. இதனால் மின்தடை ஏற்படுகிறது" என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். இந்த விளக்கம் தீப்போல் சமூகவலைதளத்தில் பரவி விவகாரமானது.
வைரலாகும் அணில் மீம்ஸ்கள்
நடைமுறையில் அணில்களால் மின் கம்பிகள் பாதிக்கப்பட்டாலும் அமைச்சரின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலானது. உடனடியாக அமைச்சரையும், அணிலையும் கலாய்த்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. இந்த விஷயத்தை அதிமுக ஐடி அணி கையில் எடுத்து தங்களுக்கு சாதமாக மாற்றிக்கொண்டது. அணில் மீம்ஸ்களை பகிர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை கலாய்த்தது.