சென்னை விமான நிலையத்தின் உள்பகுதியில், விமானங்கள் நிறுத்தும் பகுதியான, வான்வழி பகுதியில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யப்படும் வசதி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “இந்திய விமான நிலைய ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில், முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் இந்த எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்தில் மாசு பரவுதை குறைக்கும். அதோடு எரிபொருள் செலவையும் குறைக்கும் வகையிலும், இந்த புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
அதோடு சென்னை விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களுக்கும், அவர்களின் வாகனங்களை உடனடியாக மின்சார வாகனங்களாக மாற்றும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் செலவை குறைப்பதோடு, மாசு அதிகரிப்பதையும் கட்டுப்படுத்த முடியும்.