சென்னை: மின்சார வாகனங்களின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக ஊரடங்கு காலத்துக்குப் பின் அவற்றின் தேவை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், மின்கலனால் (பேட்டரி) இயங்கும் மின்சார வாகனங்களுக்கான சாலை வரி 100 விழுக்காடு ரத்துசெய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்மூலமாக மின்சார வாகனங்களுக்கான விலை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஏதெர் எனெர்ஜி, "மின்சார வாகனங்களுக்கான சாலை வரி ரத்து என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பால் சென்னை, கோவையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 6,900 ரூபாய்வரை வாகனங்களின் விலை குறையும். இதன்மூலம் மின்சார வாகன விற்பனை அதிகரிக்கும்" எனக் கூறியது.
வரி விலக்கு மூலம் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கும் என விற்பனை முகவர்களும் கருதுகின்றனர். இது குறித்து பேசிய சல்மான் என்ற முகவர், "கடந்த மூன்று மாதங்களாக மின்சார வாகன விற்பனை அதிகரித்துள்ளது. கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் வண்டியை வழங்க முடியவில்லை. அந்த அளவுக்கு புதிய ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன.
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது, மின்சார வாகனங்களுக்கான சலுகைகள் அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அதிக அளவில் மின்சார வாகனங்களுக்கு மாறிவருகின்றனர். மேலும், இது அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் என்பதாலும் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வரி விலக்கு மூலம் விற்பனை 30 முதல் 40 விழுக்காடு அதிகரிக்கும் என நம்புகிறோம்" என்று கூறினார்.