சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் கசாலியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அரசியல் கட்சி ஒன்றின் நிர்வாகி ஒருவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஒரு வீட்டில் பெண்களுக்கு துண்டு பிரசுரத்துடன் 500 ரூபாய் வழங்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி இருந்தது. வாக்காளர்கள் சேப்பாக்கம் தொகுதியை சேர்ந்தவர்தானா என்பதை உறுதி செய்த பின்னரே, அங்கு உள்ள பெண் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் காட்சி இடம் பெற்று இருந்தது.
இதையடுத்து சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அந்த வீடியோ பதிவை கைப்பற்றி ஆய்வு செய்தார். இதுதொடர்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் நாகநாதன், அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதில், "சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட களிமண்புரத்தில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வீடியோவில் இருப்பவர்கள் யார் யார்? பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளளார்.
இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் அலுவலர் கொடுத்துள்ள வீடியோ காட்சியில் இருப்பவர்கள் யார் யார் என்பதனை கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டி உள்ளனர். இதற்கிடையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தேர்தல் நடத்தும் அலுவலர் கைப்பற்றியுள்ள பணப்பட்டுவாடா வீடியோ, விசாரணை அறிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளார்.