தமிழ்நாடு அரசியல் களத்தில் தேர்தலின் வேகம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர் பட்டியல், வேட்பாளர் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், வாக்குறுதிகள் அளித்தல் என பரபரத்த தேர்தல் களம், தற்போது பரப்புரையில் நிற்கிறது. தேர்தலிலேயே மிக மிக முக்கியமான கட்டம் வாக்குறுதிகள் அளிப்பது.
அனைத்துக் கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். அப்படி தற்போது கோதாவில் இருக்கும், திமுக, அதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன. அதேபோல், காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளும் வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன.
தேர்தல் வாக்குறுதி என்றாலே நினைவுக்கு வருவது திமுக. பேரறிஞர் அண்ணா தொடங்கி, தற்போதைய தலைவர் ஸ்டாலின்வரை அது தொடர்கிறது. கலைஞர் கருணாநிதி கட்சியின் வாக்குறுதிகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றார். அதேபோல் இப்போதும் திமுகவின் வாக்குறுதிகள் அப்படியே இருக்கிறது என பூரிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.
திமுகவின் வாக்குறுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரவு நேர காப்பகங்கள் என கூறியிருப்பது சிறப்பு வாய்ந்தது. டெல்லியில் இந்தத் வாக்குறுதி செயலில் இருந்தாலும் திமுகவுக்கு இது முக்கியத்துவம் நிறைந்தது. அதேபோல், மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்தாக பால் என முக்கிய அம்சங்களை வைத்துள்ளது.
மேலும், ஈழ படுகொலைக்கு காரணம் திமுகதான் என்ற விமர்சனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைக்கப்பட்டு வரும் சூழலில், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, எழுவர் விடுதலை என அறிவித்திருப்பது தனது மேல் உள்ள களங்கத்தை துடைப்பதற்கானது என்றாலும், கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்போது இரண்டு விஷயங்களும் சாத்தியம்தானா என்ற கேள்வி எழுகிறது.
திமுக தனது தேர்தல் அறிக்கையை கதாநாயகனாக பார்த்தாலும் அதிமுக அதனை வில்லனாகவே பார்க்கிறது. தமிழ்நாடு கடன் அவ்வளவு இருக்கும்போது திமுகவினர் எப்படி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவார்கள், இலவச பேருந்து பயணத்தை நிகழ்த்துவார்கள் என்ற கேள்விகள் சிலரிடம் எழுகிறது.
இதே கேள்விதான் அதிமுகவுக்கும். ஏனெனில், தமிழ்நாட்டு கடன் சுமார் 5 லட்சம் கோடிக்கு மேல் இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்க, அதிமுகவோ, இலவச வாஷிங் மெஷின்கள் வழங்கப்படும், விலையில்லா ஆறு கேஸ் சிலிண்டர்கள், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என வாக்குறுதிகளை தண்ணீராய் இரைத்திருக்கிறது. ஆட்சியில் இருக்கும்போது சிலிண்டர் விலையை குறைக்க முடியாத அரசா அடுத்த முறை செய்யவிருக்கிறது என எதிர்க்கட்சியினர் அம்பு எய்கிறார்கள்.
மேலும், இரண்டு கட்சிகளும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை முக்கிய வாக்குறுதியாக இணைத்திருக்கிறார்கள். ஆனால், கடந்த 1991ஆம் ஆண்டிலிருந்து மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் எழுவர் விடுதலைக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றன என்பதை தேர்தல் ரேஸில் இரண்டு கட்சிகளையும் எதிரியாக பார்க்கும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் கேட்கின்றனர்.
அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வாங்குவோம் என்று திமுக முழங்கினால், நாங்கள் இரட்டை குடியுரிமை பெற்று தருவோம் என்கிறது அதிமுக. ஆனால், இது நடைமுறையில் சாத்தியமா போன்ற பல கேள்விகளை எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
முக்கியமாக கல்வி மாநில பட்டியலில் இணைக்கப்படும் என இரண்டு கட்சிகளும் அளித்திருக்கும் வாக்குறுதி வெறும் கண் துடைப்புக்கே என்கின்றனர் ஒருதரப்பினர். ஆட்சியில் இருந்தபோது நீட்டை தடுக்க முடியாத அதிமுகவா கல்வியை மாநில பட்டியலில் இணைக்க போராடும் என்று கேள்வி எழுப்பும் சிலர், திமுக வந்தாலும் இந்த விஷயத்தில் தீர்க்கமாக போராடுமா என்பதெல்லாம் மிகப்பெரிய சந்தேகம் என்கின்றனர்.
இலவசம் என்றாலே திமுகதான் என்ற பெயரை மாற்றி எழுதியிருக்கிறது அதிமுக. இந்தத் தேர்தல் அறிக்கையில் அதிமுகவே இலவச ஆயுதங்களை அதிகமாக அறிக்’கை’யில் எடுத்திருக்கிறது. ஆறு கேஸ் சிலிண்டர்கள், அனைவருக்கும் வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, விலையில்லா அரசு கேபிள் என அதிமுக அடுக்கிக்கொண்டே சென்றிருக்கிறது.
இனி எப்போதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை தெரிந்துகொண்டு அதிமுக இவ்வளவு இலவசங்களை அள்ளி வீசியிருப்பதாகவும் இந்த திட்டங்களுக்கெல்லாம் நிதிக்கு எங்கே போவது என எதிர்முகாம் கேள்வி எழுப்ப, நாங்கள் அறிவித்திருக்கும் திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமானவைதான். மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் நாங்கள் நிதி ஆதாரம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்கின்றனர் ஆளும் தரப்பினர்.
தமிழ்நாட்டின் இரண்டுப் பிரதான கட்சிகளில் ஒரு கட்சி பூரண மதுவிலக்கு விஷயத்தை பேசவே இல்லை, ஒரு கட்சி படிப்படியாக குறைக்கப்படும் என்று மேம்போக்காக பேசியிருக்கிறத்து. ஆனால், காங்கிரஸ் கட்சியோ பூரண மதுவிலக்கு என்று உறுதியளித்திருக்கிறது.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் அரசின் ஆண்டு வருமானம் 100 கோடிகளுக்கு குறைவாக இருந்தபோதே பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. இப்போதைய அரசின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடியாக இருக்கும்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் தயக்கம் காட்ட தேவையில்லை என்று கூறியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்வரை மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும். ஒவ்வொரு தாலுகாவிலும் குடிக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படுமென்று ஒரு வாக்குறுதியை கொடுத்துள்ளது. மதுவிலக்கு முழுவதுமாக சாத்தியமில்லை என்று கூறப்படும் மாநிலத்தில், பூரண மதுவிலக்கு என்று காங்கிரஸ் அறிவித்திருப்பதே பாராட்டுக்குரியது.
முக்கியமாக, பூரண மதுவிலக்கு சாத்தியமில்லாதபட்சத்தில், தாலுகா அளவில் மறுவாழ்வு மையம் என்ற வாக்குறுதி அளித்ததற்காக கைக்கு நிச்சயம் நாம் கை கொடுக்கலாம்.
போக்குவரத்து வசதிகள் என்ற வாக்குறுதியில், முக்கியமான பேருந்து நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அவைகளின் தரம் உயர்த்தப்ப்ட்டு அங்கு ஆண், பெண் பயணிகளுக்கு தனி குளியல் கழிப்பிட வசதிகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதிக்கு வரவேற்பு கிடைத்தாலும், முக்கியமான பேருந்து நிலையங்களுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்படுகிறது என்றால் சாதாரண பேருந்து நிலையங்களுக்கும் செய்ய வேண்டும். அதிக கிராமங்கள் இருக்கும் தமிழ்நாட்டில் அந்தந்த கிராமங்களின் அருகில் இருக்கும் அனைத்து நகர பேருந்து நிலையங்களுக்கும் இந்த வசதி செய்துகொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் எழுந்திருக்கிறது.
இருந்தாலும், தமிழ்நாட்டில் தற்போதைய அரசின் கஜானா காலி ஆகி கடன் அதிகரித்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் வைக்கும்போது இது எப்படி சாத்தியம் என்று ஒருசாரார் கேள்வி எழுப்புகின்றனர்.