தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்களை ஏமாற்றி நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி..!' - முதலமைச்சர் விமர்சனம்! - விமர்சனம்

சென்னை: "மக்களை ஏமாற்றி நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றுள்ளது" என்று, சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

assembly

By

Published : Jul 12, 2019, 4:57 PM IST

சட்டப்பேரவையில், கைத்தறி, கதர்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் சுந்தர் பேசும்போது, "நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அதே நேரத்தில் ஆளும் கட்சி ஒரே ஒரு தொகுதியி்ல் மட்டுமே வெற்றி பெற்றது" என்றார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் இழந்த நீங்கள், நாடாளுமன்ற தேர்தலில் தவறான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் குறுக்கிட்டு, "தமிழ்நாடு அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அதிக முறை தோல்வி கண்ட ஒரே கட்சி திமுகதான். அதே நேரத்தில் அதிக முறை ஆண்ட கட்சியும், இனியும் ஆளும் கட்சியாக இருக்கப்போவதும் அதிமுகதான். நீங்கள் தவறான வாக்குறுதிகளை கொடுத்துதான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றீர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.15 லட்சம் கோடி தேவைப்படும். அந்தளவிற்கு பணம் இங்கே இருக்கிறதா? என பேசினார்.

மீண்டும் பேசிய திமுக உறுப்பினர் சுந்தர், "தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அதிலும் அந்த தொகுதிக்குள் வரும் 2 சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. அடுத்து வேலுாரிலும் வெற்றிக்கொடி நாட்டுவோம்" என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "உங்களை பல ஆண்டுகள் கோட்டை பக்கமே தலை காட்டாமல் செய்யதவர் எம்.ஜி.ஆர்." என கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சுந்தர், "உங்கள் தலைவர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியை தழுவியவர். ஆனால், எங்கள் தலைவர் தோல்வியையே தழுவாதவர்" எனக் கூறியதால், பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details