சென்னை: கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும், வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றுவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநிலங்களிலுள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு எவ்வாறு வாக்கு எண்ணிக்கையை நடத்துவது என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துடன் நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் அறைகள் பெரிய இட வசதியுடன் உள்ளது. எனவே மேசைகளை குறைக்கும் வாய்ப்புகள் குறைவு தான்.