சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று (நவ 9) நடைபெற்றது.
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் தொடங்கியுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 மாநில தேர்தல் பணிகள் இருந்தாலும், தேர்தல் நடைபெறாத மாநிலங்களில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளான தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகியவை நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்ததும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதையும் படிங்க:தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் புதிய போக்குவரத்து மாற்றங்கள்..! வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்..!
இந்நிலையில், மண்டல வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை தேர்தல் ஆணையர் தர்மேந்திர ஷர்மா, மூத்த துணை தேர்தல் ஆணையர் நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர் மனோஜ்குமார் சாஹூ, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவட்சவா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்ட ஒழுங்கு நிலை, வாக்குச்சாவடிகள் தொடர்பானவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மாநிலத்திற்குள் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகள் எது என்று கன்டறிந்து, அந்தந்த வாக்குசாவடிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது மற்றும் மூத்த வாக்களர்கள் வாக்குசாவடிகளில் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக ஏற்பாடுகளை மேற்கொள்வது என பல்வேறு வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளபட்டது
இதையும் படிங்க:பெரியார் சிலை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை - அமைச்சர் பொன்முடி!