தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை களத்தில் வெக்கை கூடியிருக்கிறது. மாநிலக் கட்சித் தலைவர்களிலிருந்து தேசிய கட்சி தலைவர்கள் வரை பரப்புரையில் சுற்றிச்சுழன்று வருகின்றனர்.
தேர்தலில் அறிக்கைகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது பரப்புரை. ஒரு கட்சிக்காரரின் தரத்தை நிர்ணயிப்பதும், மக்கள் மத்தியில் அவர் எந்தவிதத்தில் சென்று சேர்கிறார் என்பதையும் பரப்புரையே தீர்மானிக்கிறது.
இதற்கு முன் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் செய்த பரப்புரைப் பேச்சைக் கேட்கவே அவ்வளவு கூட்டம் கூடும். கூடியவர்கள் அந்தப் பரப்புரை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது தங்களது கட்சிக்காரர்கள் செய்த பரப்புரையை அசைபோட்டபடி செல்வார்கள்.
தங்கள் தலைவர்களின் பேச்சிலிருந்து ஏதேனும் புது விஷயத்தையோ, கடந்த கால வரலாறையோ கற்றுக்கொண்டு செல்லும்போது தொண்டர்களின் மத்தியில் தேர்தல் வேலைக்கான வெறி ஒன்று பிறக்கும்.
அண்ணாவின் பேச்சில் பொது அறிவு, திராவிட உணர்வு, சுயமரியாதை, மாநில சுயாட்சி உரிமை, மொழி உணர்வு, அடுக்கு மொழி ஆகியன கொப்பளித்தன. கருணாநிதியின் பேச்சில் அண்ணாவின் நீட்சி தெரிந்தாலும், அவரும் சில சமயங்களில் தரம் தாழ்ந்து பேசினார் என்ற புகார் எதிர்க்கட்சியினரால் இன்றளவும் வைக்கப்படுகிறது. அதேபோல் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பேச்சுகளும் சாமானியர்களை கட்டிப்போடக்கூடியது.
காலம் செல்லச்செல்ல பரப்புரைக் களத்தின் தரம் குறைந்து இப்போது ஒன்றுமே இல்லாமல் ஆகியிருக்கிறது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலுக்காகவும் களத்தில் இருக்கும் அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட பரப்புரையில் இருக்கின்றனர்.
ஆனால், தற்போதைய பரப்புரையின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. 'மோடிதான் எங்கள் டாடி' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகிறார். தனது கடைசிக் காலத்தில் பாஜகவையும், மோடியையும் தீவிரமாக எதிர்த்தவரைத் தனது தலைவியாகக் கொண்ட ஒருவர், மோடியை தங்கள் டாடி என்று கூறியதை அதிமுகவினரே ரசிக்கவில்லை.
ராஜேந்திர பாலாஜியின் தலைவியான ஜெயலலிதா, கனிமொழி குறித்தும் ஆ. ராசா குறித்தும் தரம் தாழ்ந்து பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. 'நூலைப் போல சேலை... தாயைப் போல பிள்ளை...' என்பதைத்தான் ராஜேந்திர பாலாஜி வகையறாக்கள் நிரூபிக்கிறார்கள் என்ற விமர்சனத்தை அதிமுகவின் எதிர்த்தரப்பு கூறுகிறது.
ஜெயலலிதா மீதும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஏகப்பட்ட விமர்சனங்களை பலர் வைத்திருக்கின்றனர். அதையெல்லாம் தாங்கி முதலமைச்சராக, தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்த ஜெயலலிதா தனக்கு பின்னால் வந்த பெண் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டுமேயொழிய இப்படி வார்த்தையில் விஷம் தடவியிருக்கக்கூடாது.
தாய் வழிச் சமூகத்தில் இருந்த இனம், பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலம் என்று மார் தட்டிக்கொள்ளும் ஒரு மாநிலத்தில்தான் விமர்சனமாக இருந்தாலும், கிண்டலாக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான தயாநிதி மாறன், ஜெயலலிதா குறித்தும் மோடி குறித்தும் தரம் தாழ்ந்து பரப்புரையில் பேசினார். நாங்கள் மட்டுமா பேசுகிறோம் அவர்களும்தான் பேசினார்கள் என்று திமுகவினர் கூறலாம்.
அப்படிப்பார்த்தால் தயாநிதி மாறன் பேசியதற்கும் கனிமொழி குறித்து ஜெயலலிதா பேசியதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஜெயலலிதா பேசியது தவறென்றால் தயாநிதி பேசியதும் தவறுதான்.
திமுகவுக்கான இந்திய முகம் என்று முரசொலி மாறனுக்கு பிறகு பெயரெடுத்தவர் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா. மெத்தப்படித்தவரான அவர், தனது பரப்புரையின்போது முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் குறித்து ஆபாசமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு ஒன்று பெரும் விஸ்வரூபம் எடுத்தது.
முதலில், தான் பேசியது குறித்து விளக்கி, மன்னிப்பு கோர மறுத்த ஆ. ராசா, பின்னர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார். அவர் கூற வந்தது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றாலும், அவர் அதற்காகப் பயன்படுத்திய ஒப்புமை தவறானது என்பதே யதார்த்தம்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் தொடக்கக்கால தொழிலைக் கூறி அவர் பேசியதை, கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். 'தம்பி ராசாவுக்கு' என்று முரசொலியில் தலையங்கமேகூட எழுதியிருப்பார். ஆனால் தற்போதைய தலைமை அதனை மென்மையாகக் கண்டிக்கிறது.
குலத்தொழில் முறைக்கு எதிராகவும், சுயமரியாதைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் தனது நாள்களை அர்ப்பணித்துக்கொண்ட இரு தலைவர்களைக் கொண்டிருந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் இப்படி பேசியது அபத்தத்தின் உச்சம்.
அதேபோல், திமுகவின் பேச்சாளரான திண்டுக்கல் ஐ. லியோனி, பெண்களின் உடலமைப்பு குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஒரு பிரதான கட்சியின் பேச்சாளராக பரப்புரைக் களத்துக்கு வரும்போது நிச்சயம் தனது வார்த்தைகளுக்கு அவர் கடிவாளம் போட்டிருக்க வேண்டும்.
ராசாவின் பேச்சு அடங்குவதற்குள், முதலமைச்சர் பழனிசாமி அதனை தனது பரப்புரை களத்தில் தழுதழுத்தபடி பயன்படுத்திக்கொண்டார். தாயைப் பற்றி பேசியதை எப்படி ஒருவரால் கடந்து செல்ல முடியும், அதனை அவர் பரப்புரையில் மக்கள் மத்தியில் பேசியதில் என்ன தவறு என சிலர் கேள்வி எழுப்பலாம்.
பிரச்னை இங்கு அதுவல்ல. தனது தாயைப் பற்றி ராசா இப்படி பேசிவிட்டாரே என்று முதலமைச்சர் கலங்கியதெல்லாம் சாதாரணமான ஒரு மனிதனின் உணர்வென எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், அந்தப் பேச்சை அவர், ‘இப்படிப்பட்ட திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் நிலைமை என்னவாகும்’ என்ற கேள்வியோடு முடித்தார்.
ராசா பேசியதற்கு முதலமைச்சர் உண்மையிலேயே கலங்கினாரா, இல்லை அரசியலுக்காக கலங்கினாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது. ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசுவது எவ்வளவு தவறோ, கண்ணியக்குறைவோ, அதற்கு ஈடானது அதை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதும்.