ராணுவத்தில் கர்னலாக இருந்து ஓய்வு பெற்றவர் குமார் (72). இவர் தாம்பரத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்திவருகிறார். இவருக்கு செந்தில் குமார் என்ற நபர் அறிமுகமாகி திருப்பதி தேவஸ்தானத்தில் காவலாளி பணிக்கு 450 ஆள்கள் தேவைப்படுவதாகவும், அந்த வேலைக்கான ஒப்பந்தத்தை தங்களுடைய நிறுவனத்திற்கு வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தான முக்கிய தலைவர்களிடம் நெருக்கமாக உள்ள ரமேஷ் நாயுடு என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளார். பின்னர் இருவரும் இந்த ஒப்பந்தத்தை வாங்கிதருவதாகக் கூறி வித்யா ராணி என்பவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி உள்ளனர்.
வித்யா ராணி திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராக இருப்பதாகவும், குமார் நடத்தும் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை பெற்று தருவதாகவும், அதற்கு வைப்பு தொகையாக பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து குமார் ஆன்லைன் மூலம் முதலில் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். பின்னர் 50 லட்சம் ரூபாய் பணத்தை ரொக்கமாக தர வேண்டும் என கூறியதையடுத்து, ஓப்பந்த பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு 50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தாம்பரத்தில் உள்ள இவருடைய நிறுவனத்திற்கு தேவஸ்தான போர்டில் இருந்து ஆடிட்டர்கள் வருவதைபோல வந்து ஆவணங்களை எல்லாம் சரிபார்த்து நாடமாடி உள்ளனர். தேவஸ்தான போர்டு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் எனக் கூறி இருவர் அலுவலகத்தில் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர்.