சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தவகையில், இன்று(டிச.19) புதியதாக 18 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே உலுக்கிய கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து சிங்கப்பூர் மற்றும் கேரளாவில் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்திலிருந்த கரோனா பாதிப்பு தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது.
முன்னதாக, கரோனா தொற்று பாதிப்பின் போது, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முகக்கவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்தது.