சென்னை: சமீப காலமாகவே விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துகளில் கடத்தல் தொழில் அதிகமாகி வருகிறது. இதனைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கடத்தல் ஓயந்தது போல தெரியவில்லை. ஆகையால் கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் சுங்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், துபாயிலிருந்து இலங்கை வழியாக, சென்னைக்கு பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இருந்து, தனிப்படை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை மற்றும் துபாயில் இருந்து வரும், அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும் படியாக வந்த பயணிகளை நிறுத்தியும் சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 2 பெண் பயணிகள் உட்பட 5 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவர்களை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்தனர். அதோடு அவர்களை தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று, பெண் அதிகாரிகள் துணையுடன், முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது அவர்களின் உள்ளாடைகள் மற்றும் உடலுக்குள் தங்கப் பசைகள், சிறிய தங்கத் துண்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அதே நேரம் இலங்கையில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த போது, இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.