சென்னை:சென்னையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பியதாகத் தொடுத்த வழக்கில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் மாரிதாஸைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஒரு நாள் காவல் துறை காவலில் மாரிதாஸை சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.
பிணை கோரிய மாரிதாஸ்
இந்நிலையில், மாரிதாஸ் பிணை கோரி எழும்பூர் பெருநகரத் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது சைபர் கிரைம் காவல் துறையினர், ஒரு குறிப்பிட்ட குழுவினரைத் தூண்டும் வகையில், மாரிதாஸ் காணொலி பதிவிட்டு வெளியிட்டதாக வாதத்தை முன்வைத்தனர்.
மேலும், பொய்யான ஆதாரங்களைக் காட்டிக் குறிப்பிட்ட குழுவினரைத் தூண்டும் வகையில் பேசியதால், 2,500-க்கும் மேற்பட்டோர், தனியார் தொலைக்காட்சிக்குக் கடிதம் அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சைபர் கிரைம் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணொலி வெளியான பிறகு, மூன்று லட்ச ரூபாய்க்கும் மேலான பணம் மாரிதாஸ் சம்பாதித்து இருப்பதாகக் காவல் துறை தரப்பில் வாதத்தை முன்வைத்துள்ளனர்.