நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்களை அவதூறாகப் பேசி சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்ட விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினரால் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜோ மைக்கல் பிரவீன் என்பவரை மிரட்டிய விவகாரத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவ்வழக்கிலும் நடிகை மீரா மிதுன் எம்.கே.பி. நகர் காவல் துறையினரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
விரட்டும் வழக்குகள்
அந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்ட நிலையில், எழும்பூரில் 2020ஆம் ஆண்டு ஜோ மைக்கல் பிரவீனை மிரட்டிய புகாரிலும், 2019ஆம் ஆண்டு நட்சத்திர விடுதி மேலாளர் அருண் என்பவரை மிரட்டிய புகாரிலும், எழும்பூர் காவல் துறையினர் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்தனர்.
இவ்வழக்குகளில் நடிகை மீரா மிதுனை முறையாக கைது செய்யும்விதமாக அவரை எழும்பூர் 14ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதித் துறை நடுவர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் காவல் துறையினர் இன்று முன்னிறுத்தினர்.
கதறிய மீரா மிதுன்
வழக்கு வாதத்தின்போது நடிகை மீரா மிதுன், காவல் துறையினர் தன்னை தொடர்ந்து சித்ரவதை செய்து தற்கொலைக்குத் தூண்டுவதாகக் குற்றஞ்சாட்டினார். இந்த இரண்டு வழக்குகளிலும் கைது நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து தனக்கோ தனது வழக்கறிஞருக்கோ எந்தவொரு தகவலும் எழும்பூர் காவல் துறையினர் தெரிவிக்கவில்லை. எனக்காக வாதிட வழக்கறிஞர் வரவில்லை என முறையிட்டார்.