சென்னை: தமிழ்நாட்டில் Monocrotopho, Profenophos, Acephate, Profenophos+Cypermethrin, Chlorpyriphos+Cypermethrin மற்றும் Chlorpyriphos என்ற ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கான தடையும், எலி பேஸ்ட்க்கு நிரந்தர தடையும் விதித்து இன்று (டிச.13) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தற்கொலைக்கு காரணமான பூச்சி கொல்லி மருந்துகள்கள் தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. உயிர் கொல்லி மருந்தான எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது 3 சதவீதம் மஞ்சள், பாஸ்பரஸ் உட்பொருளை கொண்ட எலி மருந்து பேஸ்ட்டை நிரந்தரமாக தடுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தடை விதிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் தடை செய்யப்படுகிறது. அந்த மருந்து பொருள்களை வாகனத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு அபாயகர பூச்சி கொல்லிகளுக்கு 60 நாட்களுக்கு தடைக்கு வேளாண் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதை மேலும் 30 நாள் நீட்டிக்க விதிகளில் இடம் உள்ளது. இந்த 6 பொருள்களுக்கு மத்திய அரசு மூலமே நிரந்தர தடை பெற முடியும். தற்போது 6 உயிர்கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம், தற்கொலைகள் குறைவதை மத்திய அரசுக்கு எடுத்து கூறி அந்த பூச்சி கொல்லிகளுக்கு நிரந்தர தடை பெற முயற்சிப்போம்.
மருந்தகங்களில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் அனைத்தும் எளிதாகவும், வெளிப்படையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தற்கொலை செய்வோர் அதனை எளிதில் வாங்குகின்றனர். சானிப் பவுடரில் ' வண்ணக் கலப்பு ' இருப்பதால் தொழில்துறை மூலம் அரசாணை பெற வேண்டி உள்ளது.