சென்னை:ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், சென்னை தியாகராய நகரில் நேற்று (ஏப்ரல் 9) 'ஈழ தமிழர்க்கு விடியல்' எனும் தலைப்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று, ஈழ தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிரபாகரன் கடிதம் வாழ்நாளில் கிடைத்த மிக சிறந்த பரிசு:அப்போது மேடையில் பேசிய வைகோ, "இலங்கைக்கு இன்று இந்தியா உதவுகிறது. ஆனால், 2009ஆம் ஆண்டு 1.5 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, இந்திய அரசு என்ன செய்தது. இலங்கையில் யார் அதிபராக வந்தாலும் ஈழ தமிழர்களுக்கு அவர்கள் விரோதமாகவே இருப்பார்கள்.
பிரபாகரன் எனக்கு எழுதிய கடிதத்தை வாழ்நாளில் கிடைத்த மிக சிறந்த பரிசாக கருதுகிறேன். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் நான்தான் ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் எழுப்பினேன். அது தான் என் வாழ்நாளில் செய்த சாதனையாக எண்ணுகிறேன்" என்றார்
ஈழ தமிழர்களின் நலனுக்காக மோடியை சந்திக்கவும் தயார்: அதைத்தொடர்ந்து பேசிய திருமாவளவன், "இந்த நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் விசிக ஆதரிக்கிறது. அதை நடைமுறைப்படுத்த விசிக துணையாக இருக்கும். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது.
சிங்கள மக்களே வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அங்குள்ள தமிழர்களின் நிலையை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. தேர்தல் அரசியலோடு ஈழ தமிழர் அரசியலை இணைத்து பார்க்க கூடாது.
இன பகைவர்களை அம்பலப்படுத்தாமல், அவர்களுக்கு எதிராக போராடாமல் நமக்குள்ளே நாம் சந்தேகப்பட்டு கொண்டு சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். பாஜக, ஆர்.எஸ்.எஸ் இங்கு மத வழியிலான பெரும்பான்மை வாதத்தை தூக்கி பிடிப்பதுபோல இலங்கையில், சிங்கள பவுத்த பேரினவாதிகள் செயல்படுகின்றனர்" என்றார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதா? ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினார்.
ஈழ தமிழர்களின் நலன்களுக்காக மோடியை சந்திக்கவும் பாஜக அரசின் தயவை கோரவும் நான் தயார், ஈழ தமிழர்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால், அதற்கு இந்திய அரசின் ஆதரவு தேவை எனத் திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீனவர்களின் ஜாமீனுக்கு ரூ.1 கோடி கேட்கும் இலங்கை: அதிர்ச்சியில் தமிழ்நாட்டு மீனவர்கள்