சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் இளநிலை தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். இந்த நிலையில், முதுகலை மருத்துவ படிப்புகளான எம்ட., எம்எஸ்., டிப்ளமோ உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் 2023-24 கல்வி ஆண்டில் சேருவதற்கு முதுகலை நீட் நுழைவுத் தேர்வில் ஜீரோ பர்சன்டைல் (தகுதி மதிப்பெண்) பெற்று இருந்தால் போதும் என தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.
ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் 3-வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்ளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஜீரோ பர்சன்டைல் அதாவது கடைசி தரநிலை எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறும்போது, "நீட் தேர்வு அறிமுகம் செய்யும்போது மாணவர்களின் கல்வி தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என அறிவித்தனர். ஆனால், தற்பொழுது முதுகலை மருத்துவ படிப்பில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கு முன் வராததால் ஜீரோ பர்சன்டைல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளனர்.
நீட் தேர்வில் ஜீரோ பர்சன்டைல் மதிப்பெண் பெறுபவர்கள் முதுகலை படிப்பில் இடங்களை தேர்வு செய்தால் அவர்களிடம் எப்படி தரமான மருத்துவ சேவையை எதிர்பார்க்க முடியும். எனவே அரசு உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும். மருத்துவத்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் சீட்டை விற்பதற்காக எதிர்கால தலைமுறையை வீணடித்து விடக்கூடாது.