இது தொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதன் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் செயலாளர் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின், ஒன்றிய பிரதேசங்களில் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் தேசிய கல்வி கொள்கை 2020 நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்லலாம் என்ற கருத்துரைகள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களிடம் கேட்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து ஆழ்ந்த விவாதத்தை அரசு தனியார் பள்ளி ஆசிரியர்கள் முதல்வர்கள் நடத்தி தங்கள் கருத்தை மத்திய அரசின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு தேசிய கல்வி கொள்கை 2020 வெளியிடப்பட்டுள்ளது.
அது குறித்து நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை. மாநில அரசுகள் இன்னும் இது குறித்தான தங்கள் கருத்தை தெரிவிக்கவில்லை.
மாநில அரசின் அமைச்சரவை தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து விவாதித்து எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை. மாநில அரசு தனது நிலையை தெரிவிப்பதற்கு முன்பாகவே, மாநில முதலமைச்சரின் தலைமையில் உள்ள அமைச்சரவைக்கு தெரிவிக்காமல், கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான கருத்துக்களை மாநில அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கருத்துக்களை பெறுவது குறித்து மத்திய அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரடியாக மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தேசிய கல்வி கொள்கை 2020 நடைமுறைப்படுத்துவதற்கான கருத்துரைகளை மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தக் கடிதம் வழக்கமான நிர்வாக செயலபாடு கிடையாது.