சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2019-20 கல்வி ஆண்டிற்கான இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, பன்னிரெண்டு ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 77.48 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
அதற்கு அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் எட்டு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாடப்புத்தகங்களை வழங்கி தொடங்கிவைத்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய கல்வி பாடத்தை படிக்க 220 நாட்கள் தேவைப்படுவதாகவும், இயற்கைப்பேரிடரால் கடந்த ஆண்டு 198 நாட்கள் மட்டும்தான் பாட வகுப்புகள் நடைபெற்றன எனவும், பாடத்தை முடிக்க போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று 220 நாட்கள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒருபோதும் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று உறுதிபட அவர் கூறினார்.