இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்துவருவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன. தமிழ்நாட்டில் மார்ச் 31ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் நீட்டிக்கப்படுகிறது என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா, உயர் கல்வித் துறையின்கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”மார்ச் 31ஆம் தேதிவரை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தங்களது வீட்டிலிருந்தே பணிபுரியலாம். கல்வி சம்பந்தப்பட்ட பணிகளையும், பாடத்திட்டம், அடுத்த பருவத்திற்கான முன்னேற்பாடுகளையும் செய்யலாம். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அனைத்து விடுதிகளும் சுத்தம்செய்யப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.