சென்னை:ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிமுக தலைமை அலுவலகத்தின் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் வழங்கப்பட்ட 75 மோதிரங்களை, ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு அணிவித்தார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், "ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா நடத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். குறிப்பாக, திருமண உதவித் தொகையாக ரூ.50,000 மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை ரூ.6,000ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தி, பின்னர் ரூ.18,000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு, கரு நல்ல முறையில் இருக்க வேண்டும் என ஊட்டச்சத்து பெட்டகத்தை ஜெயலலிதா வழங்கினார். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக மகப்பேறு மருத்துவமனையை அமைத்துக் கொடுத்தார்.
இன்றைக்கு இந்தியாவிலேயே மருத்துவ சேவை நன்றாக தமிழ்நாட்டில் இருக்கக் காரணம், அதிமுக அரசுதான். மாணவ மாணவிகள் சிறப்பாக கல்வி பயில்வதற்கு ஏதுவாக விலையில்லாத புத்தகம், சைக்கிள், மடிக்கணினி போன்றவற்றைக் கொடுத்து அழகு பார்த்தவர், ஜெயலலிதா. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் திருமண உதவித்திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். மடிக்கணினி, அம்மா இருசக்கர வாகனம், அம்மா கிளினிக் போன்ற திட்டங்களை நிறுத்திவிட்டார்கள்" என்றார்.
இதையும் படிங்க: நானும் டெல்டாக்காரன் தான்; நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது - முதலமைச்சர் உறுதி