சென்னை:2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், இன்று (மார்ச் 28) பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்காததால், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் எடப்பாடி பழனிசாமியிடம் தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வழங்கினர்.
இந்த வெற்றியை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் என அறிவிக்கப்பட்ட சான்றிதழை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, உடனடியாக பொதுச்செயலாளராக பதவியேற்று கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி. இன்று முதல் நான்தான் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையாளர்கள் அறிவித்துள்ளனர். புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5ஆம் தேதி முதல் தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் செயல்படுவேன்" என்று கூறினார்.