சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று (ஏப்ரல்.6) தொடங்கி நடைபெற்று வருகிறது. துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் மே மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மீதான விவாதத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கும் நிகழ்வு.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் 2022-23ஆம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். அப்போது 'நீர்வளம் நிலவளம் மகிழும் விவசாயிகள்' என்ற நீர்வளத்துறையின் சாதனைகள் - 2022 புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
நீர்வளத்துறையின் சாதனைகள் - 2022 புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட்டார் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் தொழில் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து சட்டப்பேரவை விதி 110இன் கீழ் உரையாற்றினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் 110-விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிட்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ. 68,375 கோடி முதலீடும் 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன" என முதலமைச்சர் தெரிவித்தார். அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சொத்து வரி உயர்வு குறித்துப் பேசினார்.
வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் தமிழகத்திற்கு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து பேசிய முதலமைச்சர் அதன் பின், சொத்து வரி சீராய்வு தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் விளக்கம் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "சொத்து வரி உயர்வை திமுக அரசு மனமுவந்து உயர்த்தவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காதபோது, வரியை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏழை, எளிய அடித்தட்டு மக்களைப் பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. 83 % மக்களை சொத்து வரி உயர்வு பாதிக்காது. கட்டடங்களின் பரப்பளவு வாரியாக வகைப்பிரித்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.
இதை ஏற்றுக் கொள்ளாத அதிமுக சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் "சொத்து வரியை குறைத்திடு குறைத்திடு" என்று முழக்கங்கள் எழுப்பினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "திமுக அரசு பொறுப்பேற்று 10 மாதம் ஆகிறது. இந்த 10 மாதத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டாக மக்கள் கடுமையாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட உள்ள நிலையில், இந்த சொத்து வரி மக்கள் மீது சுமையைச் சுமத்துவதாக உள்ளது. மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மத்திய அரசு எந்த இடத்திலும் சொத்து வரி உயர்த்த வேண்டும் என கூறவில்லை.
திடீரென சொத்து வரி உயர்த்தப்படுவதாக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரியை உயர்த்தமாட்டோம் என அவரே கூறிவிட்டு, தற்போது அவரே உயர்த்தியதை நியாயப்படுத்தும் வகையில் பேசுகிறார். உள்ளாட்சித்தேர்தலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடியும் வரையும் காத்திருந்து, வாக்களித்த மக்களுக்குப் பரிசாகச் சொத்து வரியை திமுக உயர்த்தியுள்ளது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொத்து வரியா? சொத்தைப் பறிக்கும் வரியா எனப் பேசியவர், இன்றைக்கு உயர்வை நியாயப்படுத்திப்பேசுவது ஏற்புடையதல்ல. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது ஒரு பேச்சு, முதலமைச்சராக இருக்கும் போது ஒரு பேச்சு என மாற்றி மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு தான் உண்மையான அரசு, அந்த வகையில் அதிமுக அரசு செயல்பட்டது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை உயர்வு வருமானம் பிரதமரின் கஜானாவுக்கு செல்கிறது - அமைச்சர் மெய்யநாதன்