தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அம்மா உணவகத்தை மூடினால் என்ன? என துரைமுருகன் கேட்டது மனவேதனை...!' - Edappadi Palaniswami sad about duraimurugan speech in assembly

அம்மா உணவகத்தை மூடினால் என்ன என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டது மனவேதனையை அளித்தது. ஜெயலலிதா பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்களை திட்டமிட்டு திமுக அரசு முடக்குகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேதனை தோய்ந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு
சட்டப்பேரவை கூட்டத்தொடர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

By

Published : Jan 7, 2022, 2:55 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் (ஜனவரி 5) ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் இன்றுடன் (ஜனவரி 7) நிறைவடைந்தது.

ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரும் சட்ட முன்வடிவை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேரவையில் அறிமுகம்செய்தார்.

சட்ட முன்வடிவு அறிமுகம்

தமிழ்நாடு தேர்தல் கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் ஆணையர், உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதை மூன்றாண்டுகளாகக் குறைத்து சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்தும், கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களிடமிருந்தும் கூட்டுறவுச் சங்கங்களில் நிதி முறைகேடுகள், மோசடிகள் தொடர்பான பல புகார்கள் வந்ததன் அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகள் ஆய்வுசெய்யப்பட்டன். அதன்பேரில், அதிக அளவில் நிதி முறைகேடுகளும் - போலி நகைகள் மீதான கடன்கள், கோடிக்கணக்கில் போலி கடன்கள் வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதவிக்காலம் குறைப்பு

கூட்டுறவுச் சங்கங்களின் பாதுகாப்பைக் கருதி நிறுவனங்களை நெறிப்படுத்தவும், கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் சட்ட முன்வடிவு இன்று அறிமுகம்செய்யப்பட்டது. இதனை ஆரம்ப நிலையிலேயே தாங்கள் எதிர்ப்பதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

ஜனநாயகப் படுகொலை

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஐந்து ஆண்டு ஆயுள்காலம் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் நிலையை மூன்று ஆண்டாகக் குறைப்பதாகச் சட்ட முன்வடிவு கொண்டுவந்திருக்கிறார்கள்.

கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்துவதற்குத் தனி ஆணையம் உள்ளது. அதன் மூலமாகத்தான் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள், தலைவர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்தப் பதவியை தற்போது சட்டவிரோதமாக மூன்றாண்டுகள் என மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை.

கூட்டுறவுச் சங்கங்களைக் கலைக்கக் கூடாது

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கூட்டுறவுச் சங்கங்களைக் கலைக்க திமுக அரசு நினைக்கிறது. கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர கூட்டுறவுச் சங்கங்களைக் கலைக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்குச் சிறப்பான செயல்பாடுகள் தமிழ்நாட்டில் நிலவிக் கொண்டிருக்கிறது.

ஏதோ முறைகேடு நடைபெற்றது

நேற்றைய தினம் தியாகராய நகரில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். ஏதோ முறைகேடு நடைபெற்றது போலவும் அது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். Area based development என்ற மத்திய அரசின் திட்ட அடிப்படையில்தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையிலான குழுதான் அவற்றைக் கண்காணித்து தலைமைப் பொறியாளர்கள் தலைமையில்தான் பணிகள் நடைபெற்றன.

அம்மா உணவக விவகாரம் - மனவேதனை

அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு இடத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டாம், திட்டம் சரியாக இருக்கிறதா இல்லையா? அம்மா உணவகத்தை மூடினால் என்ன என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டது மனவேதனையை அளித்தது. திட்டமிட்டு ஜெயலலிதா பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்களை முடக்குகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பாக 21 பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு 15, 16 பொருள்கள் மட்டுமே வழங்கப்பட்டுவருகின்றன. கொடுக்கின்ற அந்தப் பொருள்களும் தரமானதாக இல்லை.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே அதில் வழங்கப்பட்ட பருப்பு உள்ளிட்ட பொருள்களை வடமாநிலங்கள், பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல்செய்து கொடுத்துள்ளனர். காரணம் அதில் கரெப்ஷன், கலெக்ஷன், கமிஷன் பெறுவதற்காகத்தான்.

உள்ளூரிலேயே கொள்முதல் செய்துகொடுத்தால் அதில் உள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதை மறைக்கவே பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெகிழியை ஒழிப்பதற்காக மஞ்சப்பை திட்டத்தை முதலமைச்சர் கொண்டுவந்தார். ஆனால், பொங்கல் பரிசுப் பொருள்கள் நெகிழி பொருள்களில் வந்துள்ளன.

நாளை நடைபெறவுள்ள நீட் ரத்து குறித்த அனைத்து சட்டப்பேரவைக் கட்சிகள் கூட்டத்தில், மற்ற கட்சிகள் எதை வலியுறுத்துகின்றனவோ அதைப் பொறுத்து எங்களது கருத்து இருக்கும். டாஸ்மாக் பார் டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுவருகின்றன. அது நியாயமான முறையில் நடைபெற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ’ 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை’- அமைச்சர் மா. சுப்ரமணியன்

ABOUT THE AUTHOR

...view details