தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மிக்ஜாம் புயல் குறித்து எச்சரித்த வானிலை மையம்.. அரசின் உதாசீனமே வெள்ள பாதிப்புக்கு காரணம்" - ஈபிஎஸ்! - Michaung cyclone Flood Relief

மிக்ஜாம் புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 10:46 PM IST

சென்னை:வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 8) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் தீவிர புயல் குறித்து, ஒரு வாரத்துக்கு முன்னரே வானிலை ஆய்வு மையம் உரிய முன்னெச்சரிக்கையை அளித்தும், திமுக அரசு உரிய முன்னேற்பாடுகளை செய்யாததாலேயே மக்கள் இந்த அளவுக்கு பாதிக்கப்பட காரணம்.

அதிமுக ஆட்சியின் போது, புயல் வீசிய போதெல்லாம், மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு, அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் மழை வெள்ளத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை.

வெள்ளை அறிக்கை வெளியிடுக:மழைநீர் வடிகால்வாய் பணிகள் ரூ.4,200 கோடி செலவில் மேற்கொண்டதாக தமிழக அரசு தெரிவித்து வரும் நிலையில், தற்போது அப்பணிகள் எந்த நிலையில் உள்ளன? என்பது குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். சென்னையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும், வெள்ள நீர் இல்லை, மழைநீர் தேங்கவில்லை எனத் தொடர்ந்து செய்தி நிறுவனங்கள் மூலம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மக்களுக்கு பொய்யான தகவல்களையும், பொய்யான செய்தியையும் கொடுத்து வருகின்றனர்.

ஐந்து நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாத இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் நிவாரணப் பணிகளையும், மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்யுமாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து உரிய உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

அதிமுக தொடங்கிய பணிகள் நிறைவேறியதா?:திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும், ரூ.4,200 கோடி மதிப்பிலான வடிகால்வாய் திட்டப்பணிகள், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. அவை, 2,400 கி.மீ. தூரத்தில் 1,400 கி.மீ. தூரத்துக்கு வடிகால்வாய் பணியை அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் உலக வங்கியிடம் கடன் பெற்று திட்டத்தை தொடங்கினோம்.

ரூ.42 கோடியில் கார் பந்தயம் எதற்கு?: திமுக அரசு மக்களுக்கு அனைத்து செய்திகளும், தகவல்களும் பொய் செய்திதான். வேளச்சேரி மண் சரிவு விபத்தில் 5 நாட்களுக்கு பிறகே, உடல்களை மீட்டதாகவும், மக்களின் உயிர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்றார். இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தையத்துக்கான இடம் இருந்தும், சென்னையின் மத்தியில் ரூ.42 கோடியில் கார் பந்தயம் ஏன்? எனக் கேள்வியெழுப்பினார். அந்த தொகையை வடிகால்வாய் பணிக்கு செலவிடலாம். பால் தட்டுப்பாட்டை தவிர்க்க முன்னேற்பாடாக, பால் பவுடர் மூலம் பால் உற்பத்தி செய்து ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றார்.

ரூ.30 லட்சத்தில் அதிமுகவின் நிவாரணப் பொருட்கள்:புயல் உருவாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே உரிய அறிவிப்பை கொடுத்தும், முன்னேற்பாடுகளை செய்யாமல், பார்வையிடுவதில் மட்டுமே பொம்மை போல் செயல்பட்டவர்தான், தமிழகத்தின் பொம்மை முதலமைச்சர்.
ரூ.30 லட்சம் செலவில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள் சென்னை வரவுள்ளதாகவும், வெள்ளம் பாதித்த இடங்களில் அந்த நிவாரணப் பொருட்கள் உரிய இடத்துக்கு கொண்டு சென்று மக்களுக்கு வழங்கப்படும் என்றும்" அவர் கூறினார்.

இதையும் படிங்க:நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் விலக்கு - செல்லூர் கே.ராஜூ கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details