சென்னை:சுதந்திர தினத்தையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவிலில் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பொதுமக்களுடன் உணவு அருந்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டுயிருக்கிறார். அந்த அறிக்கையை படித்து பார்த்தபொழுது, இவர் எப்படி தமிழ்நாட்டில் 4 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தார் என்றே தெரியவில்லை. படிப்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் நிச்சயம் தோன்றும்.
கன்னியாகுமரி, ஆசாரிப்பள்ளத்தில் இருக்கின்ற 3 வயது குழந்தைக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு சிகிச்சை திருப்தி அளிக்காத சூழ்நிலையில் பக்கத்தில் இருக்கின்ற கேரளாவில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்திருந்தனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் அந்த குழந்தைக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கின்றனர் என்றெல்லாம் ஒரு புகாராக சொல்லி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. கேரளாவில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டிற்கு சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினந்தோறும் 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 சதவீதத்திற்கும் மேலானவர்கள் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், அந்தக் குழந்தை அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று தேர்ச்சி அடையாமல் கேரளாவிற்கு சென்று தேர்ச்சி அடைந்திருக்கிறது என்று மருத்துவத்துறையின் மோசமான நடவடிக்கைகள் என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்தவர், அவருக்கு இந்த சிறிய விஷயம் கூட தெரியவில்லை.
அதுமட்டுமில்லாமல் இன்னொன்றும் சொல்கிறார் மா.சுப்ரமணியன் உடற்பயிற்சி பயிற்சியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார். குறை எதுவும் இல்லை, உண்மையை ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி மிக்க நன்றி. தினமும் நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து காலை 6 மணிக்குள் எனது உடற்பயிற்சியை முடிப்பேன்.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும், எட்டு கிலோமீட்டர் என்கின்ற அளவில் ஒரு நடைபாதையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது ஜப்பான் தலைநகரில் மட்டும் தான் 8 கிலோமீட்டர் என்கின்ற அளவில் Health Walk என்கின்ற நடைபயிற்சி நிலையம் அமைந்திருக்கிறது. கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் அளவிலான Health Walk நடைபாதையை ஏற்படுத்துவோம் என்று சொல்லி இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அதிகாலை 5 மணியிலிருந்து ஆறு மணி வரை சுமார் ஒரு மணி நேரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கண்காணிப்பாளரை அழைத்துச் சென்று, அந்தப் பாதையின் இருபுறமும் மரங்கள் நடப்பட வேண்டும் என்கின்ற அவசியம் குறித்தும், இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவசியம் குறித்தும் அறிவுறுத்தி வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமி, அவருடன் இருப்பவர்கள் எல்லாம் காலை 6 மணி வரை நிச்சயம் குறட்டை விட்டுக் கொண்டுதான் இருந்திருப்பர். காலை 4 மணிக்கு நான் எழுந்து நடப்பது அவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எதிர்காலத்தில் மக்கள் நோய் நொடி இல்லாமல் இருப்பதற்கு நடைபயிற்சி செய்வது அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு செய்வது அவருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த பணியை செய்கின்ற போது, குறிப்பாக விருதுநகரில் எட்டு கிலோமீட்டர் பணிக்கான நடைபாதையை ஆய்வு செய்ய வருகிறேன் என்று சொன்னபோது அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்த அந்த பணியில் பொதுமக்களே நிறைய பேர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தை அனைவரும் பாராட்டுகின்றனர். இதனால் நான் விளையாட்டுத்துறைக்கு பயிற்சியாளர் என்கிறார் மிகவும் மகிழ்ச்சி. என்னை அவர் அந்த அளவுக்கு ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி.
எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கேள்வியை இங்கு வைக்க உள்ளேன். நீங்கள் நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளீர்கள், உங்களுடைய சுகாதாரத்துறை அமைச்சர் 10 ஆண்டுகள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துள்ளார், அவர் இதுவரை எத்தனை தேசிய தர நிர்ணய சான்றிதழ்கள் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த தேசிய தர நிர்ணய சான்றிதழ் ஒன்றிய அரசால் தரப்படுபவை. கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 478 தேசிய தர நிர்ணயச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் தேசிய நிர்ணய சான்றிதழ்களின் எண்ணிக்கை 239. இதுவரை 50 சதவீதம் சான்றிதழ்கள் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கங்கள், மகப்பேறு சிகிச்சைகளுக்கு சான்றிதழ்கள் (லக்ச்யா) 2017 முதல் ஒன்றிய அரசு தந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் 2017 முதல் நீங்கள் ஆட்சியில் இருந்தவரை பெறப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கை வெறும் 34. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தரப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கை 43. இதுவரை 77 சான்றிதழ்கள் ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டுள்ளது.