சென்னை: கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையைக் காப்பற்ற மின்கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர், இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி, அதன் மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்து கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித் துறையும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது என்றும், எனவே மின் கட்டணங்களைக் குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
ஒரு யூனிட்டுக்கு ரூ.1.15 ரூபாய்:தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெரும்பாலும் LT. 111B (0 - 150 K.W) மின் இணைப்பைப் பெற்றது. முன்பு யூனிட் ஒன்றுக்கு 6.75 ரூபாய் நிலைக் கட்டணமாக, கிலோ வாட் ஒன்றுக்கு 35 ரூபாயும் செலுத்தி வந்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.
புதிய மின் கட்டணம் அமல்படுத்தும் முன்பு, ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் இக்கூட்டமைப்பினர் கலந்து கொண்டு, ஏற்கனவே தொழில்துறை பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்றும், வேண்டுமெனில் யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணத்தை 1.15 ரூபாய் கூடுதலாக செலுத்துகிறோம் என்றும், டிமாண்ட் கட்டணத்தையும் இதுவரை இல்லாத பீக் ஹவர் சார்ஜ் என்ற புதிய கட்டண விகிதத்தையும் எங்கள் மீது சுமத்தாதீர்கள் என்று வலியுறுத்தியதாகவும் இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பீக் ஹவர் நேரத்தில் இயங்க முடியாத நிலை: முன்பு 1 கிலோ வாட்டுக்கு 35 ரூபாய் என்று, 112 கிலோ வாட்டுக்கு 3,920 ரூபாய் செலுத்தி வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ வாட்டுக்கு 153 ரூபாய் என 430 சதவீதம் உயர்த்தி, 112 கிலோ வாட்டுக்கு 17,200 ரூபாய் என உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் 10 மணி வரையும் பீக் ஹவர் கட்டணம் என்று அறிவித்து, அந்த நேரத்தில் தொழிற்சாலைகள் இயங்கினால், கூடுதலாக 15 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய கட்டணத்தை அறிவித்துள்ளதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பீக் ஹவர் நேரத்தில் இயங்க முடியாத நிலையில் உள்ளன.
நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டது: கடந்த கரோனா நோய் பெருந்தொற்றுக்குப் பிறகு, வடஇந்திய மாநிலங்களில் தொழில்கள் துவங்க பல்வேறு மானியங்களை அளித்து தொழில் முனைவோர்களை ஈர்ப்பதால், அம்மாநிலங்களில் புதிய தொழிற்சாலைகள் பெருமளவில் துவங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் மூலப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஆட்கள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், தற்போது இரண்டாம் முறையாக மின் கட்டணத்தையும் உயர்த்தியதால், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் மூடப்பட்டு, பல தொழில் முனைவோர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
முன்பிருந்தது போல் மாற்ற வேண்டும்:ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்று பலமுறை அறிக்கைகள் மற்றும் பேட்டிகளின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் விடியா திமுக அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து, உடனடியாக மின் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, இந்த அரசு பீக் ஹவர் சார்ஜை மட்டும் தற்காலிகமாக TOD மீட்டர் பொருத்தும் வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
நிர்வாகத் திறனற்ற இந்த திமுக அரசின் முதலமைச்சர் உண்மையிலேயே, இந்தியாவிலேயே தமிழகம் தொழிற்துறையில் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டுமெனில், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையையும், மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்படுவதையும் தடுக்கும் விதத்தில் மின் கட்டணங்களை முன்பிருந்தது போல், அதாவது அதிமுக ஆட்சியில் இருந்ததைப் போல் மாற்றி அமைக்க வலியுறுத்துகிறேன்.
ஒரு அரசு வரி விதிக்கும் போதும், கட்டணங்களை உயர்த்தும் போதும், எப்படி பசுவிடம் இருந்து பசு அறியாமலேயே பால் கறக்கிறோமோ அதுபோல், தொழில் முனைவோர் பாதிப்படையாத வகையில், அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறையாத நிலையில் செயல்பட வேண்டும். அளவுக்கு மீறி பசுவிடம் இருந்து பாலை உறிஞ்ச நினைத்தால், பசு ரத்தம் இன்றி மாண்டு போகக்கூடிய நிலை ஏற்படும். ஏனெனில், பசு தனது ரத்தத்தை பாலாக மக்களுக்கு வழங்குகிறது.
கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்:அதுபோல், தொழில் முனைவோர்கள் தங்கள் முதலீடுக்கு நஷ்டம் இன்றி, தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ப ஊதியம் வழங்க ஏதுவாக, அதே சமயத்தில், அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயை பெறக்கூடிய வகையில், சொத்து வரி உயர்வு, தொழில் வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றை தொழில் முனைவோர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய வீதத்தில் விதிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
இக்கூட்டமைப்பினர் பீக் ஹவர் கட்டணங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், நிறுவனத்தின் மேற்கூரையில் வங்கிக் கடன் பெற்று சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்வதற்கு மின் வாரியம் யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 1.53 பைசா கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மொத்த மின் கட்டணத்தில் ஒன்றரை மடங்கு கட்டணத்தை முன்பணமாக ஏற்கனவே மின் வாரியம் வசூலித்து உள்ளது என்றும், இப்பணத்திற்கு அவர்கள் வங்கிகளில் 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று மின் வாரியத்திற்கு கட்டி உள்ளதாகவும்,
குறு, சிறு தொழில் துறையைக் காப்பற்ற வேண்டும்: ஆனால் மின் வாரியம் 5.70 சதவீத வட்டி மட்டுமே வழங்குவதாகவும், இந்த நிலையில் ஒரு கிலோ வாட்டுக்கு முன்பு இருந்த 35 ரூபாய் கட்டணத்தை, 430 சதவீதம் உயர்த்தி 153 ரூபாய் என்று கட்டணம் விதித்துள்ளதால், தொழிற்சாலைகள் மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய ஒன்றரை மடங்கு முன்பணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், எனவே, தொழில் முனைவோர்கள் வங்கிகளுக்கு அதிக வட்டி தரவேண்டி உள்ளதால், முன்பு இருந்தது போல் ஒரு கிலோ வாட்டுக்கு 35 ருபாய் மட்டுமே நிலைக் கட்டணமாக விதிக்க வலியுறுத்துவதாகவும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையைக் காப்பற்ற இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பொன்முடி சந்திப்பு! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?