சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் வியூகங்களை தோற்கடித்து ஈபிஎஸ் முதல் படியை ஏறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றமும், தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட நகர்வாக பல செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார். ஏற்கனவே பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பினர் சமர்ப்பித்துள்ளனர்.
அதிமுகவின் புதிய உறுப்பினர் அட்டைக்கான விண்ணப்ப படிவம் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்ட இருக்கிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் தலைமை கழக செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதே ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில், செயற்குழு உறுப்பினர்களாக உள்ள தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக உள்ள மகளிர் மட்டும் என இந்த நிர்வாகிகள் மட்டும் தவறாமல் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami) அறிவித்துள்ளார்.