சென்னை:சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் கடந்த 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் மாணவரின் தந்தை இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன்(19), நீட் தேர்வு தோல்வியால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை செல்வசேகரும் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொண்ணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இருவரையும் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது அருமைப் புதல்வரும் தேர்தல் சமயத்தில், எப்படியாவது தமிழகத்தில் ஆட்சிப் பீடத்தில் அமர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்தனர்.
தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றி, பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்தனர். அதில் ஒன்றுதான் 'நீட் ரத்து' என்ற போலி வாக்குறுதி. முதன் முதலில், நீட் தேர்வு பயத்தால் அன்று அரியலூர் மாணவி அனிதா தனது இன்னுயிரை இழந்த நிகழ்வில், ஆட்சி அதிகாரம் என்ற சுய லாபத்திற்காக அரசியல் நடத்திய திமுக, தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையின்போது, ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம், நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள், அதன் சூட்சமம் ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்று திமுகவின் இளைஞர் அணித் தலைவர் கூறியிருந்தார்.
ஜெயலலிதாவின் ஆட்சியிலும், தொடர்ந்து என்னுடைய அரசு நடத்திய நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்களின் போதும், அதை கேலி செய்து, வக்கனை பேசியது திமுக. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் என்னுடைய அரசு நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தீர்மானம் இயற்றியது போல், இவர்களும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றினர். நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தனர். மீண்டும் ஆளுநர் கையொப்பம் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருப்பதாக தம்பட்டம் செய்வதைத் தவிர, நீட்டுக்கு எதிராக இவர்கள் ஒன்றையும் செய்யவில்லை.