சென்னை:வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 - 2024ஐ இன்று (மார்ச் 21) நடைபெற்ற சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது. இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த ஒரு பெரியத் திட்டங்களும் இல்லை.
வேளாண் பட்ஜெட்டை இரண்டு மணி நேரம் அமைச்சர் வாசித்தார். ஆனால், எந்த சிறப்பும் அதில் இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு 195 ரூபாய் மட்டுமே உயர்த்தி வழங்குவது என்பது மிகப்பெரும் ஏமாற்று வேலை. கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், விவசாயிகளை ஏமாற்றும் அரசாக திமுக அரசு உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, முறையாக ஆய்வு செய்யாமல் மிகக் குறைவான இழப்பீடு தொகையை வழங்கினார்கள்.
அறுவடை செய்த நெற்பயிர்களை, நேரடியாக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுவதால், பல லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை உள்ளது. வேளாண் பட்ஜெட் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர். மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.