தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரவள்ளிக் கிழங்கில் மாவு பூச்சித் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி - etv bharat

மரவள்ளிக் கிழங்கில் மாவு பூச்சித் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

By

Published : Aug 3, 2021, 5:07 PM IST

சென்னை: இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் , எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மரவள்ளிக்கிழங்கு விளைச்சலை நம்பி சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் சுமார் 470 ஆலைகள் மூலம் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச், சேலம் சேகோ சர்வ் கூட்டுறவு விற்பனை நிலையத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்படுகிறது.

மாவு பூச்சித் தாக்குதல்

மரவள்ளிக் கிழங்கு பயிரிட முக்கிய எதிரி மாவு பூச்சி ஆகும். தற்போது மாவு பூச்சியின் தாக்குதலால் மரவள்ளிக் கிழங்கு பயிர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி, அதன் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதிமுக அரசின் நடவடிக்கை

சென்ற ஆண்டு மாவு பூச்சியின் தாக்குதல் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு அதிமுக அரசு உடனடியாக, அதற்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

அரசு செலவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட நிலங்களில் மருந்து தெளித்து மரவள்ளிக்கிழங்கு பயிர் காப்பாற்றப்பட்டது. விவசாயிகளும் நஷ்டத்தில் இருந்து மீண்டனர்.

மரவள்ளிக் கிழங்கு பயிர் மட்டுமல்ல மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பூச்சிகளால் பாதிப்பு அடைந்துள்ளது என்று அருகில் உள்ள வேளாண் அலுவலர்களுக்கு தெரிவித்த உடனேயே பயிர்களைக் காப்பாற்ற, வேளாண் துறை மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.

விவசாயிகளைக் காக்க வேண்டும்

தற்போது சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற 10 மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிர் மாவு பூச்சியினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, உடனடியாக இம்மாவட்டங்களில் உள்ள வேளாண் துறை அலுவலர்களை அப்பகுதிகளுக்கு நேரடியாக அனுப்பி, பூச்சி மருந்து தெளித்து மாவு பூச்சி பாதிப்பிலிருந்து விவசாயிகளைக் காக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:69% இட ஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details