இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் பல திட்டங்களுக்கு வித்திட்டது திமுகவில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மூத்த நிர்வாகியுமான டி.ஆர் . பாலுதான்.
ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் டி.ஆர் . பாலு, இத்திட்டத்தை தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் செயல்படுத்த முடிவெடுத்து 2010இல் ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றார். இதை டி.ஆர். பாலுவே தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அது ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கின்றன.
திமுகதான் அதைக் கொண்டுவந்தது என்பதை அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல, ஆழ்துளைக் கிணறு அமைத்து ஆய்வுப் பணி தொடங்க நான்கு ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு 2011 ஜனவரி மாதத்தில் அனுமதி அளித்தது திமுக அரசுதான்.
அதுவும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது, அவரது முன்னிலையில்தான் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, ஒருபோதும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கவில்லை. அதனை முழுமையாகக் கடைப்பிடித்துவந்தோம் என்பதையும் தமிழ்நாடு மக்கள் நன்கு அறிவார்கள்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று “தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும், காவிரி டெல்டா மாவட்டங்கள், சில டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன்.
தொடர்ந்து 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அதிமுக அரசு, வேளாண் பெருமக்களின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டு மிகக் குறுகிய காலத்திலேயே சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, தகுந்த வழிமுறைகளை ஆராய்ந்து, இந்தச் சட்டத்தினை மிக நுணுக்கமாகத் தயாரித்து, “பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான ஒரு தனிச் சட்டத்தினை" சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து அதனை நிறைவேற்றியதன் மூலம் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாத்துள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள்.